ஆதிதிராவிட மக்கள் கலெக்டரிடம் மனு

ஆதிதிராவிட மக்கள் கலெக்டரிடம் மனு

Update: 2022-05-16 15:38 GMT
திருப்பூர்:
பொங்கலூர் அருகே வீடுகளை காலி செய்ய அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியதால் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிட மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்து முறையிட்டனர்.
வீடுகளை காலி செய்ய நோட்டீஸ்
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை கலெக்டர் வினீத் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பொங்கலூர் ஒன்றியம் வெ.கள்ளிப்பாளையம் ஊராட்சி துத்தாரிப்பாளையத்தை சேர்ந்த ஆதிதிராவிட மக்கள் அளித்த மனுவில், நாங்கள் 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 100 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வருகிறோம். வீட்டுவரி ரசீது செலுத்தியுள்ளோம். ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வீடுகளுக்கு மின் இணைப்பும் பெற்றுள்ளோம். நீர்வழிப்புறம்போக்கு எனக்கூறி வீடுகளை காலி செய்யுமாறு அதிகாரிகள் நோட்டீஸ் கொடுத்துள்ளனர். நீர்வழிப்பாதைக்கோ, நீர்த்தேக்கப்பகுதிக்கோ எந்தவித சம்பந்தமும் இல்லாத பகுதியாக உள்ளது. எங்கள் குடியிருப்பு பகுதியை நேரில் பார்வையிட்டு மறுவகைபாடு செய்து எங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
ஊத்துக்குளி பல்லகவுண்டம்பாளையம் சரவணபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் பெற்றோர் அளித்த மனுவில், சரவணபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மழைநீர் அதிகம் தேங்கியிருப்பதால் மாணவ-மாணவிகள் நடந்து செல்ல முடியாமல் சிரமம் அடைகிறார்கள். தண்ணீர் தேங்கியிருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மழைநீரை அப்புறப்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.
சுகாதார நிலையத்துக்கு கட்டிடம்
அலகுமலை ஊராட்சி தலைவர் தூயமணி அளித்த மனுவில், ஏ.வேலாயுதம்பாளையத்தில் அரசு துணை சுகாதார நிலையத்தின் கட்டிடம் கடந்த சில ஆண்டுக்கு முன் இடிக்கப்பட்டது. தனியார் இடத்தில் சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. சொந்த கட்டிடம் இல்லாமல் பொதுமக்கள் சிரமம் அடைகிறார்கள். எனவே சுகாதார நிலையத்துக்கு சொந்த கட்டிடம் கட்டிக்கொடுக்க வேண்டும். சேமலைக்கவுண்டன்பாளையம் கிராமத்தில் அத்திக்கடவு தண்ணீரை மேல்நிலைத்தொட்டிக்கு ஏற்றமுடியவில்லை. கோவில்பாளையத்திலும் இந்த பிரச்சினை உள்ளது. தண்ணீரை சேமிப்பு தொட்டி அமைத்து குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
முதலிபாளையம் மானூர் பகுதியை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், வங்கிக்கடன் வாங்கிக் கொடுப்பதாக கூறி கார்த்திக் என்பவர் அறிமுகம் ஆனார். எலெக்ட்ரானிக் பொருட்களை வாங்குவது போல் வங்கிக்கடன் ஏற்பாடு செய்து கொடுப்பதாக கூறி எங்களிடம் இருந்த ஆதார் அட்டை, பான் கார்டு, வங்கி கணக்கு புத்தகம், ரேஷன் கார்டு நகல் பெற்றுக்கொண்டு ஏ.சி.யை வீட்டுக்கு அனுப்பி வைத்து புகைப்படம் எடுத்த பின்னர் எடுத்து சென்றனர். இந்தநிலையில் நாங்கள் ரூ.1 லட்சம் கடன் பெற்றதாகவும், அதற்கு தவணைத்தொகை செலுத்துமாறு எங்களை வலியுறுத்தி வருகிறார்கள். நாங்கள் கடனுக்கு பணம் வாங்கவில்லை. பொருளையும் வாங்கவில்லை. ஆனால் எங்கள் ஆவணத்தை வைத்து பொருள் வாங்கியதை போல் தவணை செலுத்த மிரட்டுகிறார்கள். எங்களை ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுகூறியுள்ளனர்.

மேலும் செய்திகள்