சுற்றுலா பயணிகளுக்கு கூடாரங்கள் அமைக்க வேண்டும்

வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் அமர்ந்து உணவு சாப்பிட ஏதுவாக சாலையோரத்தில் கூடாரங்கள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2022-05-16 15:37 GMT
வால்பாறை

வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் அமர்ந்து உணவு சாப்பிட ஏதுவாக சாலையோரத்தில் கூடாரங்கள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

சுகாதார சீர்கேடு 

மலைப்பிரதேசமான வால்பாறை பகுதியில் பெரிய சுற்றுலா தலங்கள் இல்லை. இருப்பினும் வால்பாறையின் இயற்கை சூழல் மற்றும் சீதோஷ்ண காலநிலையால் அதிக சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது கோடை விடுமுறையை கழிக்க  வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் மலைப்பாதையில் இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கின்றனர். 

அவர்கள் தங்களது குடும்பத்தினருடன் கொண்டு வரும் உணவு பொருட்களை சாலையோரத்தில் அமர்ந்து சாப்பிட்டு விட்டு செல்கின்றனர்.
அப்போது சுற்றுலா பயணிகள் சாப்பிட்டு விட்டு மீதியான உணவுகளை ஆங்காங்கே தேயிலை தோட்டங்கள்,  சாலையோரங்களில் வீசி விட்டு செல்கின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. 

மேலும் உணவு பொருட்களை உண்ண வனவிலங்குகள் சாலையோரத்திற்கு வருகின்றன. இதனால் சாலையை கடக்கும் வனவிலங்குகள் வாகனங்களுக்கு குறுக்கே வருவதால் விபத்துகள் ஏற்படுகிறது. இதை கருத்தில் கொண்டு சாலையோரத்தில் உணவு சாப்பிட கூடாரங்கள் அமைக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர். 

கூடாரங்கள் அமைக்க வேண்டும்

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
வால்பாறையில் அதிக சுற்றுலா பயணிகள் வந்து செல்லக்கூடிய சோலையாறு அணை சாலை, அட்டகட்டி-வால்பாறை சாலை ஆகிய இடங்களில் சாலையோரத்தில் ஆங்காங்கே சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கூடாரங்கள் அமைக்க வேண்டும். அங்கு அமர்ந்து சாப்பிட வழிவகை செய்வதோடு, குப்பை தொட்டிகள் வைக்க வேண்டும். 

 இதன் மூலம் கூடாரங்களில் அமர்ந்து உணவுருந்தி, மீதியானவற்றை வெளியே வீசாமல்  குப்பை தொட்டியில் போட்டு விட்டு செல்வார்கள். 
அந்த குப்பைகளை நகராட்சி துப்புரவு பணியாளர்கள் அன்றாடம் அகற்றிவிட்டால் சாலையோரத்திலும் தேயிலை தோட்ட பகுதிகளிலும் குப்பைகள் வீசப்படுவது தடுப்பதோடு சுகாதார சீர்கேடும் ஏற்படாது. 

எனவே, நகராட்சி நிர்வாகம் சார்பில் வால்பாறை பகுதியில் சாலையோரத்தில் சுற்றுலா பயணிகள் வசதிக்காக கூடாரங்கள் அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்