குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் தர்ணா போராட்டம்

தென்காசியில் குடிநீர் கேட்டு மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்க வந்த பெண்கள் காலிக்குடங்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-05-16 15:05 GMT
தென்காசி:
தென்காசி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் கோபாலசுந்தரராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்து மாதவன், மாவட்ட பஞ்சாயத்துகளின் உதவி இயக்குனர் பிரான்சிஸ், மாவட்ட வழங்கல் அலுவலர் சுதா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில் பொதுமக்கள் அடிப்படை வசதிகள், வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, தனிநபர் கடன் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை கொடுத்தனர். மொத்தம் 270 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

ஊத்துமலை மறவன் காலனி பகுதியைச் சேர்ந்த பெண்கள் காலிக்குடங்களுடன் கோரிக்கை மனு கொடுக்க கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். ஏற்கனவே விவசாயிகள் போராட்டத்தால் கலெக்டர் அலுவலக வாசலில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். குடிநீர் வசதி கேட்டு வந்த பெண்களை போலீசார் உள்ளே அனுமதிக்க மறுத்து விட்டனர். இதனால் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தின் எதிரே உள்ள மாவட்ட கல்வி அலுவலர் அலுவலக வாசலில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் சார்பில் ஒருவர் மட்டும் மனு கொடுக்க அலுவலகத்துக்கு சென்றார். 

இதற்கிடையே அந்த பகுதிக்கு பழனி நாடார் எம்.எல்.ஏ. வந்தார். அவரிடம் பெண்கள் தங்களது பகுதியில் மூன்று விதமான குடிநீர் கலந்து வருவதாகவும், இதனால் பொதுமக்களுக்கு நோய் ஏற்படுவதாகவும், தற்போது கடந்த சில வாரங்களாக தண்ணீர் வரவில்லை என்றும் புகார் கூறினர். அதற்கு அவர், நாளை மறுநாள் (புதன்கிழமை) அதிகாரிகள் ஊத்துமலைக்கு வருகிறார்கள். அவர்களிடம் உங்கள் கோரிக்கைகளை ஏற்கனவே கூறியுள்ளேன். குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இதைத்தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்