துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கோவை வருகை

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கோவை வருகை

Update: 2022-05-16 15:00 GMT
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கோவை வருகை
கோவை
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு விமானம் மூலம் கோவை வந்தார். குன்னூர் ராணுவ பயிற்சி கல்லூரியில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.

துணை ஜனாதிபதி வருகை

இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, நீலகிரி மாவட்டம் குன்னூர் ராணுவ பயிற்சி கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசுகிறார்.
இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர்ஷேக் கலீபா பின் ஷயத் அல்நயான் மரணம் அடைந்ததை தொடர்ந்து, அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வெங்கையாநாயுடு துபாய்க்கு சென்றதால் அவரது குன்னூர் நிகழ்ச்சியில் மாற்றம் செய்யப்பட்டது.

இதன்படி துபாயில் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு நேற்று பகல் 12.45 மணிக்கு தனி விமானம் மூலம் கோவை வந்தார். அவருடன் மனைவி உஷாவும் வருகை தந்தார். 
விமானநிலையத்தில் கலெக்டர் சமீரன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர், கோவை நகர போலீஸ் கமிஷனர் பிரதீப்குமார் மற்றும் அதிகாரிகள் வெங்கையாநாயுடுவை வரவேற்றனர்.

வானிலை பிரச்சினை

வரவேற்பு முடிந்ததும், வெங்கையா நாயுடு ஹெலிகாப்டர் மூலம் ஊட்டி செல்வதாக இருந்தது. ஆனால் வானிலை மோசமாக இருந்ததால் ஊட்டிக்கு ஹெலிகாப்டர் மூலம் செல்வது ரத்து செய்யப்பட்டது.
இதனால் அவர்,கோவை ரெட்பீல்டில் உள்ள விருந்தினர் மாளிகையில்  தங்கினார். இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஹெலிகாப்டர் மூலம் குன்னூர் சென்று வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார். பின்னர் ஊட்டி ராஜ்பவனில் தங்குகிறார். 
நாளை (புதன்கிழமை) ஊட்டி லாரன்ஸ் பள்ளியில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். 20-ந்தேதிவரை ஊட்டியில் தங்கி இருக்கும் வெங்கையா நாயுடு, அன்று காலை 8 மணிக்கு ராஜ்பவனில் இருந்து ஊட்டி தீட்டுக்கல் மைதானம் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கோவை விமானநிலையம் வருகிறார். பின்னர் கோவை விமானநிலையத்தில் இருந்து ஐதராபாத்துக்கு புறப்பட்டு செல்கிறார்.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வருகையையொட்டி கோவை மற்றும் நீலகிரி மாவட்டம் குன்னூர், ஊட்டியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
---------

மேலும் செய்திகள்