சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.;
கடலூர்,
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள வாண்டராசன்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 50). தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவள் 7 வயது சிறுமி. மனவளர்ச்சி குன்றிய அந்த சிறுமியின் பெற்றோர் கடந்த 9.9.2020 அன்று வேலைக்கு சென்று விட்டனர். இதனால் தனியாக இருந்த சிறுமி, தனது வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தாள்.
அப்போது அங்கு வந்த சக்திவேல், சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து, சிறுமியை அருகில் உள்ள ஓடைக்கு தூக்கி சென்றார். பின்னர் அங்கு வைத்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதுபற்றி அறிந்த சிறுமியின் பெற்றோர், பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
போக்சோ சட்டத்தில் கைது
அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று இவ்வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.
அதன்படி நீதிபதி எழிலரசி தனது தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட சக்திவேலுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் கூடுதலாக 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
ரூ.2 லட்சம்
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சமூக பாதுகாப்பு துறையின் சமூக நல நிதியில் இருந்து ரூ.2 லட்சம் இழப்பீடாக மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் 30 நாட்களுக்குள் வழங்கவும் உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலாசெல்வி ஆஜராகி வாதாடினார்.