பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு
ஆழியாறு அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி தண்ணீரை திறந்து வைத்தார்.;
பொள்ளாச்சி
ஆழியாறு அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி தண்ணீரை திறந்து வைத்தார்.
பழைய ஆயக்கட்டு
பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை 120 அடி கொள்ளளவு கொண்டது. இந்த அணை மூலம் பழைய, புதிய ஆயக்கட்டு பகுதிகள் பாசன வசதி பெறுகின்றன. இதை தவிர குடிநீர் தேவைக்கும் தண்ணீர் திறக்கப்படுகிறது. மேலும் ஒப்பந்தப்படி அணையில் இருந்து கேரளாவுக்கு 7.25 டி.எம்.சி. தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் பழைய ஆயக்கட்டில் அரியாபுரம், பள்ளிவிளங்கால், பெரியணை, வடக்கலூர், காரப்பட்டி ஆகிய 5 கால்வாய்கள் மூலம் பாசன வசதி பெறுகின்றன. கரும்பு, வாழை, தென்னை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது.
இந்தநிலையில் பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் வழங்க கோரி விவசாயிகள் மனு கொடுத்தனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டது. இதைதொடர்ந்து அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்கு சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ் தலைமை தாங்கினார். பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் முத்துசாமி முன்னிலை வகித்தார். மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்துகொண்டு தண்ணீரை திறந்து வைத்து, மலர்தூவி வரவேற்றார்.
தண்ணீர் திறப்பு
இதில் தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் வரதராஜன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் நரேந்திரன், முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், ஒன்றிய செயலாளர் தேவசேனாதிபதி, கோட்டூர் பேரூராட்சி தலைவர் ராமகிருஷ்ணன், கவுன்சிலர் ஆழியாறு ஆனந்த், காளிங்கராஜ் மற்றும் விவசாயிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
பின்னர் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியதாவது:-
ஆழியாறு அணை மூலம் பழைய ஆயக்கட்டு பகுதிகளில் 6,400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. முதல் போகத்திற்கு நாளை முதல் வருகிற அக்டோபர் மாதம் 15-ந்தேதி முடிய 152 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும்.
தற்போதைய நீர்இருப்பினை பொறுத்து அணையில் இருந்து 1,205 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட உத்தரவிடப்பட்டு உள்ளது. எனவே, விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி நீர் மேலாண்மை மேற்கொண்டு அதிக மகசூல் பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.