நெல்லை கல்குவாரியில் அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்யாததே விபத்துக்கு காரணம்: கே.எஸ்.அழகிரி
“நெல்லை கல்குவாரியில் அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்யாததே விபத்துக்கு காரணம்” என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டினார்.;
தூத்துக்குடி:
“நெல்லை கல்குவாரியில் அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்யாததே விபத்துக்கு காரணம்” என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டினார்.
வரவேற்பு
நெல்லையில் நடந்த காமராஜர் மற்றும் இந்திராகாந்தி சிலைகள் திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று தூத்துக்குடிக்கு வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் காங்கிரசார் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ., மாநில பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கைதிகள் மரணம்
இதையடுத்து கே.எஸ்.அழகிரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மோடி அரசின் மிக மோசமான செயல்பாடுகளில் ஒன்று சமையல் எரிவாயு விலை உயர்வு ஆகும். தவறான பொருளாதார கொள்கையால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை அதிகரித்து கொண்டே செல்கிறது. மேலும், போலீஸ் காவலில் கைதிகள் இறக்கும் லாக்-அப் இறப்பில் 2 வகைகள் உண்டு. இதற்கு முன்பு இருந்த அரசுகள் போலீஸ் காவலில் கைதிகள் இறப்பதை நியாயப்படுத்த முயற்சித்தனர்.
தற்போதைய அரசு லாக்-அப்பில் இறப்பு நடந்தால் அதை கண்டிக்கின்றது. சம்பந்தப்பட்ட போலீசாருக்கு தண்டனை தரப்படுகிறது. போலீசார் மீது கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வழக்கு நடத்தப்படுகிறது. இந்த விவகாரத்தில் தற்போதைய அரசின் போக்கு சரியானது.
கல்குவாரி விபத்து
நெல்லை அருகே கல்குவாரியில் விபத்து நடந்து உள்ளது. கல்குவாரிகளுக்கு எப்போதுமே ஆய்வு உண்டு. ஆனால், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்வதில்லை. இதுதான் தவறு. கல்குவாரிகள் முறையாக ஆய்வு செய்யப்பட்டு இருந்தால் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து இருக்காது. அதிகாரிகள் இன்னும் கவனமாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.