ஊட்டி, கூடலூரில் கொட்டித்தீர்த்த கன மழை
ஊட்டி, கூடலூரில் திடீரென பலத்த மழை பெய்தது. பந்தலூரில் மண் சரிவு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
கூடலூர்
ஊட்டி, கூடலூரில் திடீரென பலத்த மழை பெய்தது. பந்தலூரில் மண் சரிவு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
கன மழை
தமிழகப் பகுதிகளில் வழிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனாலும், வெப்பச்சலனம் காரணமாகவும் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இதேபோல் நேற்று நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, தலைகுந்தா, லவ்டேல், பிங்கர் போஸ்ட் உள்ளிட்ட இடங்களிலும் மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது சாலைகளில் சென்ற வாகனங்கள் தண்ணீரை பீச்சி அடித்தவாறு சென்றனர். இதனால் ஊட்டிக்கு வந்த சுற்றுலா பயணிகள் உடனடியாக தங்கும் விடுதிகளுக்கு படையெடுத்துச் சென்றனர். மேலும் குளிர் வழக்கத்தைவிட அதிகமாக இருப்பதால் மீண்டும் சமவெளிப் பகுதியை நோக்கி திரும்புகின்றனர். இதேபோல் பிளஸ் 1 தேர்வு எழுத சென்ற மாணவர்களும் மழை காரணமாக உடனடியாக குடை பிடித்தபடி வீடு திரும்பினர். கூடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் கோடை காலமாக இல்லாமல் குளிர்ந்த காலநிலை நிலவுகிறது. இந்த நிலையில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இருப்பினும் அடிக்கடி மிதமான வெயில் தென்பட்டது. இதனால் சீதோஷ்ண நிலை நன்றாக இருந்ததால் மக்கள் நடமாட்டமும் கூடலூர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பரவலாக காணப்பட்டது. இந்த நிலையில் மதியம் 2 மணிக்கு திடீரென பலத்த மழை பெய்தது. சுமார் 2 மணி நேரம் கனமழையாக கொட்டித்தீர்த்தது. தொடர்ந்து மழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது போதிய வெளிச்சம் இல்லாததால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி இயக்கப்பட்டது. மேலும் இடைவிடாமல் மழை பெய்து கொண்டிருந்ததால் முக்கிய கால்வாய்களில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.
வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
இந்த நிலையில் கூடலூர் தோட்டமூலா பகுதியில் சுமார் 10-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதைக்கண்ட பொதுமக்கள் தனியார் நிலம் வழியாக செல்லும் கால்வாயை உயர்த்தி கட்டியதால் வீடுகளுக்குள் தண்ணீர் வருகிறது என புகார் தெரிவித்தனர். தொடர்ந்து நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே வீடுகளுக்குள் அந்த தண்ணீரை அப்பகுதி மக்கள் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும் போது:- தனியார் நிலம் வழியாக செல்லும் கால்வாயை உயர்த்தி கட்டியதால் வீடுகளுக்குள் தண்ணீர் வருகிறது. இனி வரும் மாதங்கள் மழைக்காலம் என்பதால் தொடர்ந்து வீடுகளுக்குள் தண்ணீர் வர வாய்ப்புள்ளது. எனவே அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இதேபோல் கூடலூரில் இருந்து கோத்தர் வயல் செல்லும் சாலையிலும் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால் மழைநீர் சாலையின் மேற்புறம் பெருக்கெடுத்து ஓடி விவசாய நிலத்துக்குள் புகுந்தது. பின்னர் மழை நின்றவுடன் தண்ணீர் வழிந்தோடியது.
பந்தலூரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
பந்தலூர் மற்றும் அதன் சுறு்றுவட்டார பகுதிகளான மேங்கோ ரேஞ்ச், உப்பட்டி, பொன்னானி, கொளப்பள்ளி, அய்யன்கொல்லி, சேரம்பாடி எருமாடு உள்ளிட்ட பகுதிகளில் பலத்தமழை பெய்துவருகிறது. இதனால் சாலைகளிலும் கால்வாய்களிலும் மழைவெள்ளம் ஆறுபோல் ஓடியது. பொன்னானி, சோலாடி ஆறுகளிலும் நீரோடைகளிலும் மழைவெள்ளம் பெருக்கெடுத்தது. சாலைகளில் உள்ள குழிகளில் மழை வெள்ளம் நிரம்பி குளம் போல் காட்சி அளித்தது. பலத்த காற்றுடன் மழை பெய்ததால் மின்கம்பிகள் மரக்கிளைகள் மீது முறிந்து விழுந்து அடிக்கடி மின்தடையும் ஏற்பட்டது. இதுபற்றி அறிந்ததும் மின்வாரிய துறையினர் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து மழை மற்றும் கடும் குளிர் வீசியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
மண் சரிவு
பந்தலூர் தாலுகா சேரம்பாடி அருகே நெல்லிகுன்னுவில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதில் சாமிநாதன் வீட்டிற்கும் பின்புறம் மண்சரிவு ஏற்பட்டது. அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் உயிர்சேதம் ஏற்படவில்லை. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. கோத்தகிரியிலும் பலத்த மழை பெய்தது.