தோல்வி அடைந்த தலைவருக்கு பிரேக் பிடிப்பது கஷ்டம்- பட்னாவிஸ் பற்றி சஞ்சய் ராவத் விமர்சனம்

சாய்வான பகுதியில் கீழ் நோக்கி வரும் வாகனத்திற்கும், தோல்வி அடைந்த தலைவருக்கும் பிரேக் பிடிப்பது கஷ்டம் என தேவேந்திர பட்னாவிஸ் குறித்து சஞ்சய் ராவத் விமர்சித்து உள்ளார்.

Update: 2022-05-16 12:35 GMT
படம்
மும்பை, 
சாய்வான பகுதியில் கீழ் நோக்கி வரும் வாகனத்திற்கும், தோல்வி அடைந்த தலைவருக்கும் பிரேக் பிடிப்பது கஷ்டம் என தேவேந்திர பட்னாவிஸ் குறித்து சஞ்சய் ராவத் விமர்சித்து உள்ளார்.
பட்னாவிஸ் பேச்சு
மராட்டிய சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் மகாவிகாஸ் கூட்டணி ஆட்சியை பாபர் மசூதி கட்டிடத்துடன் ஒப்பிட்டு பேசியிருந்தார். மேலும் சிவசேனாவை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை ஓய்வு எடுக்க மாட்டேன் எனவும் கூறியுள்ளார். 
இதேபோல சிவசேனா இந்துத்வா கொள்கையில் இருந்து விலகி விட்டதாகவும், மும்பை, மராட்டியத்திற்கானது அல்ல எனவும், மும்பையை ஊழல், முறைகேட்டில் இருந்து விடுவிப்பேன் எனவும் தெரிவித்தார்.
சஞ்சய் ராவத் விமர்சனம்
இந்தநிலையில் தேவேந்திர பட்னாவிசின் பேச்சை, சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் விமர்சித்து உள்ளார். 
இது குறித்து அவர் டுவிட்டரில், "சாய்வில் கீழ் நோக்கி வரும் வாகனத்திற்கும், தோல்வி அடைந்த எதிர்க்கட்சி தலைவருக்கும் பிரேக் பிடிப்பது கஷ்டம். விபத்து தவிர்க்க முடியாது" என கூறியுள்ளார்.
இதேபோல சிவசேனா செய்தி தொடர்பாளர் மனிஷா காயன்டே எம்.எல்.சி. "முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை போன்ற பிரச்சினைகளை கடந்த சனிக்கிழமை நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். அதை தேவேந்திர பட்னாவிஸ் 'காமெடி நிகழச்சி' என்கிறார். இது தான் உங்கள் இந்துத்வாவா?" என கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும் செய்திகள்