கார் பாலத்தில் மோதி ஒருவர் பலி
கார் பாலத்தில் மோதி ஒருவர் பலியானார். பெண்கள் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஆர்.எஸ்.மங்கலம்,
கார் பாலத்தில் மோதி ஒருவர் பலியானார். பெண்கள் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
கட்டுப்பாட்டை இழந்தது
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த டிரைவர் உட்பட 9 பேர் வேளாங்கண்ணிக்கு காரில் சென்றுள்ளனர். பின்னர் நேற்று அதிகாலை 2 மணி அளவில் ஊர் திரும்பும்போது ஆர்.எஸ்.மங்கலம் அருகே வளமாவூர் விலக்கு அருகே கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டின் அருகே உள்ள பாலத்தில் மோதியது.
இதில் பாளையங்கோட்டை முத்துசாமி சந்து பகுதியை சேர்ந்த பழனி (வயது 58) என்பவருக்கு தலையில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
மேலும் காரில் பயணம் செய்த முத்துலட்சுமி (52), முத்துக்குமாரசாமி (58), ராஜராஜேஸ்வரி (48), பழனி வேலாயுதம் (54), ஆவுடையம்மாள் ஜோதி (54), சண்முகசுந்தரி (57), சங்கரநாராயணன் (58) ஆகிய 7 பேரும் படுகாயம் அடைந்தனர்.
விசாரணை
இந்த விபத்து குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருப்பாலைக்குடி போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலமாக ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தை சேர்ந்த கார் டிரைவர் அருண்சசி (44) என்பவர் மட்டும் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இந்த விபத்து குறித்து திருப்பாலைக்குடி போலீஸ் இன்ஸ் பெக்டர் பாலசிங்கம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.