உள்ளாட்சி அமைப்புகளின் பெண் பிரதிநிதிகள் சுயமாக செயல்பட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்: மாதர் சங்கம்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பெண் பிரதிநிதிகள் சுயமாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பெண் பிரதிநிதிகள் சுயமாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
மக்கள் குறைதீர்க்கும் நாள்
தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். முன்னதாக மாற்றுத்திறனாளிகளிடம் நேரடியாக சென்று மனுக்களை வாங்கினார். தொடர்ந்து கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
தூத்துக்குடி அருகே உள்ள தெற்கு சிலுக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த மக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், எங்கள் ஊரில் சுமார் 500 பேருக்கு சொந்தமான 2 ஆயிரத்து 117 ஏக்கர் நிலங்களை தனிநபர் ஒருவர் பொது அதிகாரம் மூலம் கோவையை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் மேலாளர் பெயருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்து உள்ளார். புதுக்கோட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் முறைகேடாக இந்த பத்திரப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இது குறித்து அறிந்ததும் நாங்கள் புதுக்கோட்டை சார் பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினோம். இதையடுத்து முறைகேடாக செய்யப்பட்ட பத்திரப்பதிவு ரத்து செய்யப்பட்டு உள்ளது. சார் பதிவாளர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த அரசு அதிகாரிகள் அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இதுபோன்ற முறைகேடுகள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
ஸ்டெர்லைட்
தூத்துக்குடி அருகேயுள்ள தெற்கு வீரபாண்டியபுரம், கல்லூரணி, மீளவிட்டான் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் மாவட்ட கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை 4 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளதால் எங்கள் கிராமத்தை சேர்ந்தவர்கள் வேலைவாய்ப்பை இழந்து உள்ளனர். மேலும், ஸ்டெர்லைட் நிறுவனத்தால் எங்கள் கிராமங்களில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் எங்கள் கிராமங்கள் வளர்ச்சியில் பின்தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
கோவில்பட்டி அறிஞர் அண்ணா நகர் காட்டுநாயக்கன் தெருவை சேர்ந்த மக்கள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், காட்டுநாயக்கன் சமுதாய மக்களின் நலனுக்காக அரசு பதிவு பெற்ற காட்டுநாயக்கன் சமூக சீர்திருத்த சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்க நிர்வாகி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலக்குழு உறுப்பினராகவும் இருந்து வருகிறார். இவர் சமுதாய மக்களின் நலனுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். சங்கத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி வருகிறார். எனவே, மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.
ஜனநாயக மாதர் சங்கம்
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பி.பூமயில் தலைமையில் நிர்வாகிகள் மாவட்ட கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் கவுன்சிலர்களின் உறவினர்கள் நிலைக்குழு கூட்டங்களுக்கோ, மண்டல கூட்டங்களுக்கோ வரக்கூடாது. அனைத்து மன்றங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் கவுன்சிலர்கள் சுயமாக இயங்குவதை உறுதிப்படுத்திட வேண்டும். அதே போல் ஊராட்சிகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களையும் சுயமாக செயல்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று கூறி உள்ளனர்.
அங்கன்வாடி கட்டிடம்
விளாத்திகுளம் அருகேயுள்ள கே.குமாரபுரத்தை சேர்ந்த மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில், எங்கள் ஊரில் 40 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்த அங்கன்வாடி மைய கட்டிடம் பழுதடைந்ததால் இடித்து அகற்றப்பட்டு உள்ளது. இதனால் தற்போது அங்கன்வாடி மையம் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே அங்கன்வாடி மையம் இருந்த இடத்தில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்கு சிலர் இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். எனவே, இந்த விஷயத்தில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு ஏற்கனவே அங்கன்வாடி மையம் செயல்பட்ட இடத்தில் புதிய அங்கன்வாடி மையம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.
இதேபோன்று விளாத்திகுளம் அருகே உள்ள வள்ளிநாயகிபுரத்தை சேர்ந்த மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில், வள்ளிநாயகிபுரத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மைய கட்டிடம் கட்ட மாவட்ட கலெக்டர் நிர்வாக அனுமதி அளித்தும் ஓராண்டுக்கு மேலாக பணிகளை தொடங்காமல் காலம் கடத்தி வருகின்றனர். இது தொடர்பாக பல முறை மனு அளித்தும் அதிகாரிகள் தாமதப்படுத்தி வருகின்றனர். எனவே மாவட்ட கலெக்டர் தலையிட்டு அங்கன்வாடி பணிகளை விரைவாக தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.