விவசாய நிலத்தில் புகுந்து கோழியை பிடிக்கும் சிறுத்தை புலி
பாலக்கோடு அருகே விவசாய நிலத்தில் புகுந்து கோழியை சிறுத்தை புலி பிடிக்கும் காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இந்த காட்சியால் பரபரப்பு ஏற்பட்டது.;
பாலக்கோடு:
பாலக்கோடு அருகே விவசாய நிலத்தில் புகுந்து கோழியை சிறுத்தை புலி பிடிக்கும் காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இந்த காட்சியால் பரபரப்பு ஏற்பட்டது.
விவசாயி
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையில் உள்ள தளி, தேன்கனிக்கோட்டை, பஞ்சப்பள்ளி, மாரண்டஅள்ளி வனபகுதியில் வனவிலங்குகள் உணவு தேடி கிராமங்கள் மற்றும் விவசாய நிலங்களுக்குள் அடிக்கடி புகுந்து விடுகிறது. இதற்கிடையே பாலக்கோட்டை அடுத்த வாழைதோட்டம் பகுதியில் வெங்கடாசலம் என்பவரது விவசாய நிலத்தில் கூண்டில் கோழிகள் அடைக்கப்பட்டு இருந்தன.
நேற்று காலையில் கூண்டில் அடைக்கப்பட்டு இருந்த கோழிகள் அலறம் சத்தம் கேட்டது. உடனே வெங்கடாசலம் விரைந்து வந்து பார்த்தார். அங்கிருந்து ஏதோ விலங்கு ஒன்று காட்டுப்பகுதிக்குள் ஓடியதை கண்டார்.
கண்காணிப்பு கேமரா
உடனே வெங்கடாசலம், அங்குள்ள விவசாய நிலத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவை பார்த்தார். அதில், கூண்டில் இருந்த கோழியை சிறுத்தை புலி ஒன்று வாயில் கவ்வியபடி ஓடியது. இதைக்கண்டு வெங்கடாசலம் அதிர்ச்சி அடைந்தார்.
இந்த காட்சி வெளியாகி சமூக வலைதளங்களில் பரவி உள்ளது. இது அந்த பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட எல்லை பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.