20 பஸ்களில் ‘ஏர்ஹாரன்’ பறிமுதல்
தர்மபுரியில் 20 பஸ்களில் ஏர்ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தர்மபுரி:
தர்மபுரி நகரில் இயக்கப்பட்டு வரும் அரசு மற்றும் தனியார் பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்கள் பொருத்தப்பட்டு இருப்பதாகவும், பள்ளி - கல்லூரி மற்றும் மருத்துவமனை உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பகுதிகள் மற்றும் பொதுமக்கள் அருகில் சென்று இந்த ஏர்ஹாரன்களை ஒலிக்கச் செய்வதால் மக்கள் பாதிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டரர் திவ்யதர்ஷினிக்கு புகார் வந்தது. அவரது உத்தரவின் பேரில் தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் தரணிதரன், ராஜ்குமார் மற்றும் அதிகாரிகள் தர்மபுரி பஸ்நிலையத்தில் அரசு மற்றும் தனியார் பஸ்களில் ஆய்வு செய்தனர்.
அப்போது பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்களை அகற்றினர். ஒட்டுமொத்தமாக 20 தனியார் மற்றும் அரசு பஸ்களில் இருந்த ஏர்ஹாரன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இதுபோன்ற ஏர்ஹாரன்களை பயன்படுத்தக்கூடாது என டிரைவர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். மேலும் நேதாஜி பைபாஸ் சாலையில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் வாகன சோதனையின்போது அனுதமி இல்லாமல் இயக்கப்பட்ட 3 ஆட்டோக்களுக்கு அபராதம் விதித்தனர்.