சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தங்க குடத்தில் புனிதநீர்

சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தங்க குடத்தில் புனிதநீர் எடுத்து வரப்பட்டது.

Update: 2022-05-15 23:18 GMT

சமயபுரம்:

வசந்த உற்சவம்

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடைபெறும் ஐந்து பெரும் உற்சவங்களில் பஞ்சப்பிரகாரம் என்பது வசந்த உற்சவம் ஆகும். பஞ்ச பூதங்கள், ஐம்பெரும் தொழில், ஐம்பெரும் கலை, ஐம்பெரும் பீடம், (பிரம்மா, விஷ்ணு, ருத்ரா, மகேஸ்வர, சதாசிவம்) மற்றும் ஐம்பெரும் உயிர் அவத்தைகள் (பிறப்பு, பிணி, மூப்பு, இறப்பு, முக்தி) இவற்றை விளக்கும் தத்துவமாக இந்த பஞ்சப்பிரகார உற்சவம் உள்ளது.

மாயா சூரனை சம்ஹரிக்க பராசக்தி மகாமாரி வடிவம் எடுத்த இத்தலத்தில் அக்னி நட்சத்திரத்தின் உஷ்ணகிராந்தியை தணிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் வசந்த உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு வசந்த உற்சவம் கடந்த 6-ந் தேதி தொடங்கியது.

தங்க குடத்தில் புனிதநீர்

நவ கிரகங்களையும், 27 நட்சத்திரங்களையும், 12 ராசிகளையும் இத்தலத்தில் தனது கட்டுப்பாட்டுக்குள் இயக்கும் அஷ்ட புஜங்களுடன் கூடிய நூதன ஆதிபீட சுயம்பு அம்மனுக்கு வசந்த உற்சவத்தின் நடுநாயகமாக நேற்று பஞ்சப்பிரகார மகா அபிஷேகம் நடைபெற்றது. பஞ்சப்பிரகார விழாவை யொட்டி இக்கோவிலுக்கு பாரம்பரியமாக ஒரு தங்க குடம் மற்றும் 25 வெள்ளி குடங்களில் பரிவாரங்கள் புடைசூழ மேளதாளத்துடன் கொள்ளிடம் ஆற்றில் இருந்து திருமஞ்சனத்துடன் புனிதநீர் கொண்டு வரப்பட்டது.

அதைத்தொடர்ந்து சமயபுரம் மாரியம்மன் கோவில் மண்டபத்தில் இருந்து காலை 10 மணிக்கு யானை மேல் புனிதநீர் அடங்கிய தங்க குடத்தை வைத்து மேளதாளங்கள் முழங்க, கடைவீதி ராஜகோபுரம் வழியாக கோவிலுக்குள் உள்ள உற்சவர் மண்டபத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு, தங்க கவசம் அணிவிக்கப்பட்ட உற்சவம் அம்மனுக்கு முன்பு வைக்கப்பட்டிருந்தது.

தங்க சிம்ம வாகனத்தில் புறப்பாடு

பின்னர் சிறப்பு வேதபாராயணம், வேதமந்திரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. மதியம் 2 மணிக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அம்மன் நள்ளிரவு 12 மணிக்கு வெள்ளி விமானத்தில் வெள்ளை நிற பாவாடை அணிந்து, மூலஸ்தான கருவறையை ஒட்டிய பிரகாரம் முதல் சுற்று, தங்க கொடிமரம் இரண்டாவது சுற்று, தங்கரதம் வலம் வரும் பிரகாரம் மூன்றாவது சுற்று, தெற்கு ரத வீதியில் பாதியும் வடக்கு மாடவீதியிலும் நான்காவது சுற்று, கீழரத வீதி, மேல ரத வீதி, வடக்கு ரதவீதி ஐந்தாவது சுற்றாக பஞ்சப்பிரகார சுற்றுகளை சுற்றி வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இன்று (திங்கட்கிழமை) இரவு அம்மன் தங்க சிம்ம வாகனத்தில் புறப்பாடாகிறார். நாளை (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு 12 மணிக்கு முத்துப் பல்லக்கில் அம்மன் எழுந்தருளுகிறார். 18-ந்தேதி தங்க கமல வாகனத்திலும், 19-ந்தேதி வெள்ளிக் குதிரை வாகனத்திலும், 20-ந் தேதி வெள்ளி காமதேனு வாகனத்திலும், 21-ந்தேதி மர கற்பக விருட்ச வாகனத்திலும், 22-ந்தேதி மர காமதேனு வாகனத்திலும், 23-ந் தேதி மர அன்னபட்சி வாகனத்திலும் அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் கோவில் மேலாளர் ராஜாங்கம், உள்துறை கண்காணிப்பாளர்கள் சாந்தி, அழகர்சாமி மற்றும் பணியாளர்கள் செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்