‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
வேகத்தடை அமைக்கப்படுமா?
தர்மபுரி நகரில் நேதாஜி பைபாஸ் ரோட்டில் நெசவாளர் நகர் பிரிவு சாலையில் ஏராளமான இருசக்கர மற்றும் நான்குசக்கர வாகனங்களும், ஆயிரக்கணக்கான பொதுமக்களும் சென்று வருகின்றனர். அதிக வேகத்தில் வரும் வாகனங்களால் மிகவும் நெருக்கடியான பகுதியில் அமைந்துள்ள இந்தப் பிரிவு சாலையில் அடிக்கடி விபத்து நடக்கிறது.. இதனை தடுக்க நேதாஜி பைபாஸ் ரோட்டின் 2 புறமும் வேகத்தடை அமைக்க நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வாசுதேவன், நெசவாளர் நகர், தர்மபுரி.
---
சாலையில் பக்கவாட்டு தடுப்புகள் அமைக்கப்படுமா?
சேலம் பெரியார் மேம்பாலம் காந்தி விளையாட்டு மைதானம் எதிர்புறம் பாலத்தில் இருந்து விபத்துகளை தடுக்கும் வகையில் சாலையோரம் தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த பாலம் இறங்கும் வழியில் ஆபத்தான வளைவு உள்ளது. அந்த பகுதியில் பக்கவாட்டு தடுப்புகள் இல்லாததால் வாகனங்கள் வேகமாக வரும்போது வளைவான பகுதியில் எதிர்பாராதவிதமாக விபத்துகள் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து குறிப்பிட்ட பகுதியில் சாலையில் பக்கவாட்டு தடுப்புகள் அமைக்க வேண்டும்.
-இளவரசன், 4 ரோடு, சேலம்.
===
பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா?
கிருஷ்ணகிரியில் இருந்து சென்னை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் ஏராளமானவர்கள் சென்று வருகிறார்கள். குறிப்பாக பஸ் நிலையத்தில் இருந்து வெளியே வரும் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை சந்திக்கும் பகுதியில் பயணிகள் பலரும் நின்று ஏறுகிறார்கள். அந்த இடத்தில் நிழற்குடை இல்லை. அதே போல சென்னை சாலை சந்திக்கும் ஆவின் மேம்பாலம் அருகிலும் இரவு நேரங்களில் பொதுமக்கள் நிற்க சிரமமாக உள்ளது. மழைக்காலங்களில் பயணிகள் ஒதுங்க கூட இடம் இல்லை. பயணிகளின் நலன் கருதி நிழற்கூடங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நூருல்லா, கிருஷ்ணகிரி.
===
பழுதான சாலை சீரமைக்கப்படுமா?
நாமக்கலில் பூங்கா சாலையில் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. அந்த வழியாக தான் சேலம், ஈரோடு, கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் செல்கின்றன. இந்த சாலை அம்மா பூங்கா அருகே மிகவும் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. அங்குள்ள குழியில் வாகன ஓட்டிகள் சிக்கி காயம் அடைந்து வருகின்றனர். எனவே சாலையோரம் உள்ள குழியை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குமார், நாமக்கல்.
====