சத்தியமங்கலத்தில் கழுதைப்பால் விற்பனை அமோகம்; 50 மில்லி ரூ.200-க்கு விற்றது

சத்தியமங்கலத்தில் கழுதைப்பால் விற்பனை அமோகம் நடந்தது. 50 மில்லி ரூ.200-க்கு விற்றது.

Update: 2022-05-15 21:22 GMT
சத்தியமங்கலம்
பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த சில குடும்பத்தினர் சத்தியமங்கலத்துக்கு 10 கழுதைகளுடன் வந்து உள்ளனர். அவர்கள் அனைவரும் சத்தியமங்கலம் பகுதியில் கழுதையிடம் இருந்து பாலை கறந்து விற்பனை செய்து வருகிறார்கள். இதனால் கழுதைப்பால் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.  இதுகுறித்து கழுதைப்பால் விற்கும் பெண் ஒருவா் கூறுகையில், ‘நாங்கள் கழுதைகளை வளர்த்து கோடை காலங்களில் வெளியூர்களுக்கு அழைத்து வந்து பாலை விற்பனை செய்து வருகிறோம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக நாங்கள் வெளியூர்களுக்கு சென்று கழுதைப்பாலை விற்க முடியவில்லை. தற்போது தான் சத்தியமங்கலத்துக்கு வந்து உள்ளோம். எங்களிடம் 10 கழுதைகள் உள்ளன. 2 கழுதைகளை 2 அல்லது 3 பேர் வீதி வீதியாக அழைத்து சென்று கூவி கூவி கழுதைப்பாலை விற்பனை செய்து வருகிறோம். கழுதைப்பாலை விரும்பி சாப்பிடுபவர்களுக்கு அங்கேயே கறந்து விற்கிறோம். 50 மில்லி கழுதைப்பால் ரூ.200-க்கு விற்பனை செய்கிறோம். நாள் ஒன்றுக்கு கழுதை ஒன்று 500 மில்லி பால் சுரக்கும். அதில் குட்டிக்கு 250  மில்லி போக 250 மில்லியைத்தான் விற்கிறோம். கழுதைப்பால் குடித்தால் சுவாச கோளாறு போன்ற நோய்கள் வராது என்பதால் பலரும் அதை விரும்பி குடிக்கிறார்கள். நாங்கள் பரம்பரை பரம்பரையாக இந்த தொழிலை செய்து வருகிறோம்,’ என்றனர். 

மேலும் செய்திகள்