ஈரோடு அருகே கொளத்துப்பாளையம் ஞானசக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்; ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

ஈரோடு அருகே கொளத்துப்பாளையம் ஞானசக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2022-05-15 21:18 GMT
ஈரோடு
ஈரோடு அருகே கொளத்துப்பாளையம் ஞானசக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விநாயகர் கோவில்
ஈரோடு அருகே உள்ள கங்காபுரம் கொளத்துப்பாளையம் பகுதியில் புதிதாக கன்னிமூல விநாயகர் மற்றும் ஞானசக்தி மாரியம்மன் கோவில் கட்டப்பட்டு வந்தது. கோவில் கட்டும் பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகிகள் முடிவு செய்தனர்.
அதன்படி கும்பாபிஷேக விழா கடந்த 12-ந்தேதி அதிகாலை 5.30 மணிக்கு மஞ்சள் விநாயகர் வழிபாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அன்று காலை 8 மணிக்கு முளைப்பாலிகை அழைத்தல் நடந்தது. அதைத்தொடர்ந்து 9 மணிக்கு பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர்.
கும்பாபிஷேகம்
கடந்த 13-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு சங்கல்பம், கணபதி ஹோமம், பாலிகை பூஜை, ஞானசக்திமாரி அம்பிகை அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், கோபுரகலசம் பிரதிஷ்டை செய்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அன்று மாலை 5 மணிக்கு முதல் கால யாக பூஜையும், 14-ந்தேதி காலை 7 மணிக்கு 2-ம் கால யாக பூஜையும், மாலை 5 மணிக்கு 3-ம் கால யாக பூஜையும், நேற்று காலை 4-ம் கால யாக பூஜையும் நடந்தது.
அதைத்தொடர்ந்து காலை 7.20 மணிக்கு மூலஸ்தான கன்னிமூல விநாயகர் கோவில் விமான கலசத்திற்கும், மூலஸ்தான ஞானசக்தி மாரியம்மன் கோவில் விமான கலசத்திற்கும் சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர். அதன் பின்னர் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. அதன் பின்னர் விநாயகர் மற்றும் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்