அஞ்சானத்திரி மலையில் வளர்ச்சி பணிகளுக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை
அனுமன் பிறந்தது கர்நாடகத்தில் தான் என்றும், அஞ்சனாத்திரி மலையில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
உப்பள்ளி:
பசவராஜ் பொம்மை தரிசனம்
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று தார்வார் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாா். பின்னர் உப்பள்ளி கோகுலம் பகுதியில் உள்ள தாராவதி அனுமந்தசாமி கோவிலுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சென்றார். கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு அவர் சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் கோவில் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேசியதாவது:-
ரூ.100 கோடி ஒதுக்கீடு
கர்நாடகத்தில் தான் அனுமன் பிறந்தார். அவர், கன்னட மக்களின் தவப்புதல்வர் ஆவார். ஒசப்பேட்டேயில் உள்ள அஞ்சனாத்திரி மலையில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள பட்ஜெட்டில் ரூ.100 கோடியை ஒதுக்கி இருந்தேன். அஞ்சனாத்திரி மலைக்கு செல்ல ரோப் கார் வசதிகள், இங்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அஞ்சனாத்திரி மலையில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளும் பாக்கியம் கிடைத்திருப்பதை புண்ணியமாக கருதுகிறேன். உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமருக்கு கோவில் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. அதுபோல், கர்நாடகத்தில் ஆஞ்சநேய சாமி கோவிலில் வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை செய்வதற்காக எனக்கு உப்பள்ளி மற்றும் சிக்காம்வி மக்கள் ஆசிர்வாதம் வழங்கி உள்ளனர்.
சாதித்து காட்டி இருக்கிறார்
எனது தலைமையிலான அரசு அமைந்த பின்பு கோகுலத்திலேயே முதல் முறையாக பேசி இருந்தேன். அதன்பிறகு, தொடர்ந்து எனது பயணம் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. நரேந்திர மோடி பிரதமர் ஆன பிறகு, இந்த நாடு வளர்ச்சி பாதையில் சென்று கொண்டு இருக்கிறது.
இந்த நாட்டில் எதுவெல்லாம் சாதிக்க முடியாது என்ற நிலையில் இருந்ததோ, அதனை எல்லாம் பிரதமர் நரேந்திர மோடி சாதித்து காட்டி இருக்கிறார். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி, அதற்கான பணிகள் தற்போது வேகமாக நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.