தொழிலதிபர் வீட்டில் கொள்ளை முயற்சி
அருப்புக்கோட்டையில் தொழிலதிபர் வீட்டில் கொள்ளை முயற்சி நடந்தது.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை வசந்தம் நகர் பகுதியை சேர்ந்தவர் சக்திகணேஷ் (வயது 45). தீப்பெட்டி தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மற்றும் குடும்பத்தார் வெளியூர் சென்றதால் வீட்டில் தனியாக இருந்த சக்தி கணேஷ் நேற்று முன்தினம் காந்திநகரில் உள்ள தனது சகோதரியின் வீட்டில் தங்கிவிட்டு மீண்டும் நேற்று வீட்டிற்கு வந்தார்.
அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு வீட்டை சுற்றி மிளகாய் பொடி போடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சக்திகணேஷ் உடனடியாக அருப்புக்கோட்டை டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு போலீசார் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் உதவியுடன் அப்பகுதியில் தடயங்களை சேகரித்தனர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் வீட்டில் நகை, பணம் எதுவும் இல்லாததால் மர்ம நபர்கள் ஏமாற்றத்துடன் வீட்டில் உள்ள பொருட்களை சிதறடித்து சென்றுள்ளனர்.
ஆளில்லாத வீட்டை நோட்டம் பார்த்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் தடயங்களை மறைக்க மிளகாய் பொடியை தூவி சென்றுள்ளதும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.