தஞ்சை புதிய பஸ்நிலையத்தில் வடிகால் வசதி ஏற்படுத்தி தரப்படுமா?
தஞ்சை புதிய பஸ்நிலையத்தில் மழைநீர் தேங்கியுள்ளதால் வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை புதிய பஸ்நிலையத்தில் மழைநீர் தேங்கியுள்ளதால் வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
வடிகால் வசதிகள்...
தஞ்சை புதிய பஸ் நிலையம் 1995-ம் ஆண்டு தஞ்சையில் 8-வது உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற போது கட்டப்பட்டது. அந்த காலக்கட்டத்தில் இந்தியாவின் இரண்டாவது பெரிய பஸ் நிலையமாக இது இருந்தது. இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு புறநகர் பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல் தஞ்சை பழைய பஸ்நிலையம், மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி, வல்லம், சர்க்கரை ஆலை, கந்தர்வக்கோட்டை ஆகிய இடங்களுக்கும் மாநகர பஸ்களும் இயக்கப்படுகின்றன. புதிய பஸ் நிலையத்தை சுற்றிலும் அரசு மற்றும் தனியார் பள்ளிக்கல்லூரிகள், பல நிறுவனங்களும் உள்ளன. இதனால் புதிய பஸ்நிலையம் எப்போதும் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும். குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் பயணிகள், மாணவ-மாணவிகளின் கூட்டம் அதிக அளவில் காணப்படும். குழந்தைகள் முதல் முதியவர் வரை பல்வேறு மக்கள் வந்து செல்லும் தஞ்சை புதிய பஸ்நிலையத்தில் வடிகால்கள் சரிவர பராமரிக்கப்பட வில்லை. இதனால் தஞ்சையில் இருந்து மதுரை செல்லும் பஸ்கள் நிற்கும் இடத்தின் அருகில் 2 இடங்களில் மழை நீர் குளம் போல் தேங்கி காணப்படுகிறது.
பயணிகள் கோரிக்கை
இதேபோல் தஞ்சை மாநகர பஸ்கள் நிற்கும் இடத்தின் எதிரிலும் மழை நீர் குளம் போல் தேங்கி காணப்படுகிறது. மேலும் இந்த மழைநீரில் கழிவு நீர் கலந்து விடுகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தி ஆவதுடன் தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது.
எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் புதிய பஸ் நிலையம் வளாகத்தில் தண்ணீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.