மின்சாரம் தாக்கி ஓட்டல் மேலாளர் சாவு

தஞ்சை அருகே மின்சாரம் தாக்கி ஓட்டல் மேலாளர் பரிதாபமாக இறந்தார். புதிய வீட்டு்க்கு குடிபோகும் நாளில் இந்த துயர சம்பவம் நடந்தது.

Update: 2022-05-15 19:44 GMT
வல்லம்:
தஞ்சை அருகே மின்சாரம் தாக்கி ஓட்டல் மேலாளர் பரிதாபமாக இறந்தார். புதிய வீட்டு்க்கு குடிபோகும் நாளில் இந்த துயர சம்பவம் நடந்தது.
ஓட்டல் மேலாளர் 
தஞ்சையை அடுத்த களிமேடு பகுதியை சேர்ந்தவர் சிவபாலன் (வயது 37). இவர், சென்னையில் உள்ள பிரபல ஓட்டல் ஒன்றில் மேலாளராக வேலை பார்த்து வந்தார். 
இவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் சென்னையில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தார். 
கிரகப்பிரவேச நிகழ்ச்சி
இந்த நிலையில் சிவபாலன் தஞ்சை-புதுக்கோட்டை சாலையில் உள்ள திருக்கானூர்பட்டியில் இடம் வாங்கி அங்கு புதிதாக வீடு கட்டினார். அந்த வீட்டின் கிரகப்பிரவேசம் நேற்று நடப்பதாக இருந்தது. வீடு கிரகப்பிரவேசத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிவபாலன் செய்து வந்தார்.  இதற்காக உறவினர்கள், நண்பர்களுக்கு சிவபாலன் அழைப்பு விடுத்து இருந்தார். வீடு கிரகப்பிரவேச நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருபவர்கள் அமருவதற்காக புது வீட்டின் முன்பு நாற்காலிகள் போடப்பட்டு இருந்தன. 
மின்சாரம் தாக்கியது
நேற்று முன்தினம் திருக்கானூர்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. நேற்று அதிகாலை வீட்டின் முன்பு போடப்பட்டிருந்த நாற்காலிகள் மழையில் நனைந்திருந்தது. இதனை பார்த்த சிவபாலன் அவற்றை அப்புறப்படுத்திக்கொண்டு இருந்தார். 
அப்போது எதிர்பாராதவிதமாக அங்கிருந்த மின்வயரில் சிவபாலனின் கை பட்டதால் அவரை மின்சாரம் தாக்கியது. 
பரிதாப சாவு
உடனே சிவபாலன் சத்தம் போட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டின் உள்ளே இருந்து அவரது மனைவி லலிதா வெளியே வந்தார். அங்கு தனது கணவர் கிடந்த நிலையை பார்த்து பதறியடித்து ஓடிச்சென்று மின்வயரை பிடித்தவாறு கிடந்த சிவபாலனை இழுத்தார். 
பின்னர் மயங்கி கிடந்த சிவபாலனை அவரது உறவினர்கள் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மின் இணைப்பு உடனடியாக துண்டிக்கப்பட்டதால் லலிதா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். 
மனைவி-குழந்தைகள் கதறல்
இதுகுறித்து வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து சிவபாலனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.  சிவபாலனின் உடலை பார்த்து அவரது மனைவியும், குழந்தைகளும் கதறி அழுத காட்சி காண்போரின் கண்களையும் குளமாக்கியது.  
குடிபோகும் நாளில் நடந்த துயரம்
வீடு குடிபோகும் நாளில் நடந்த இந்த துயர சம்பவத்தால் கிரகப்பிரவேசத்திற்காக வந்திருந்த உறவினர்கள் மிகுந்த வேதனை அடைந்தனர். சுபநிகழ்ச்சி நடக்க வேண்டிய வீட்டில் துக்க நிகழ்ச்சி நடந்தது. மின்சாரம் தாக்கி இறந்த சிவபாலனுக்கு 6 வயதில் ஒரு மகனும், 4 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
வீடு கிரகப்பிரவேசத்தின்போது மின்சாரம் தாக்கி ஓட்டல் மேலாளர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்