வாலிபரிடம் ரூ.85 ஆயிரம் நூதன மோசடி
பரமக்குடி வாலிபரிடம் கிரெடிட் கார்டு வரம்பினை உயர்த்தி வழங்குவதாக கூறி ரூ.85 ஆயிரம் மோசடி செய்தவர்கள் மீது சைபர்கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ராமநாதபுரம்,
பரமக்குடி வாலிபரிடம் கிரெடிட் கார்டு வரம்பினை உயர்த்தி வழங்குவதாக கூறி ரூ.85 ஆயிரம் மோசடி செய்தவர்கள் மீது சைபர்கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கிரெடிட் கார்டு
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பாரதிநகர் மேற்குத் தெருவை சேர்ந்தவர் கண்ணன் என்பவரின் மகன் மோகன் (வயது28). பொறியியல் பட்டய படிப்பு படித்துள்ள இவர் பரமக்குடி பகுதியில் ஓட்டுனர் பயிற்சி பள்ளி நடத்தி வருகிறார். இவர் தனது பண பரிவர்த்தனைக்காக பரமக்குடியில் உள்ள தனியார் வங்கியில் கணக்கு வைத்து அதன் 2 கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி வருகிறார்.
இந்தநிலையில் கடந்த 10-ந் தேதி வங்கியில் இருந்து பேசுவதாக கூறி செல்போனில் அழைத்த மர்ம நபர் தங்களின் கிரெடிட் கார்டு உச்ச வரம்பினை ரூ.85 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சத்து 85 ஆயிரமாக உயர்த்தி வழங்குவதாக கூறி உள்ளார்.
தனது பண பரிவர்த்தணைக்கு இது நன்றாக உள்ளதே என்று மகிழ்ந்த மோகன் அதற்கு ஒப்புக்கொண்டு மர்ம நபர் கூறியபடி கிரெடிட் கார்டின் எண், ரகசிய குறியீட்டு எண், காலாவதி தேதி ஆகியவற்றை கூறியுள்ளார்.
உச்சவரம்பு
இதனை தொடர்ந்து அனைத்து விவரங்களையும் பெற்றுக் கொண்ட மர்ம நபர் தங்களின் கிரெடிட் கார்டு பண பயன்பாட்டு உச்சவரம்பினை வெற்றிகரமாக உயர்த்தி விட்டதாக கூறி தங்களின் சேவை திருப்திஅளித்ததா என்று கேட்டு பதிலை பெற்று இணைப்பை துண்டித்து விட்டார்.
அதன்பின்னர் மோகன் தனது வங்கி செயலியில் சென்று மர்ம நபர் கூறியபடி உயர்த்தி உள்ளார்களா என்று பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தார். அவரின் வங்கி கணக்கில் இருந்து 2 தவணைகளில் கிரெடிட் கார்டினை பயன்படுத்தி ரூ.84 ஆயிரத்து 530 எடுக்கப்பட்டு உள்ளதாக தெரியவந்தது.
வழக்குப்பதிவு
இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் அதிர்ச்சி அடைந்த மோகன் இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் திபாகர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.