திருவையாறில், ரூ.191 கோடியில் புறவழிச்சாலை

திருவையாறில், ரூ.191 கோடியில் புறவழிச்சாலை அமைக்க டெண்டர் விடும் பணி பரிசீலனையில் உள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

Update: 2022-05-15 19:32 GMT
திருவிடைமருதூர்:
திருவையாறில், ரூ.191 கோடியில் புறவழிச்சாலை அமைக்க டெண்டர் விடும் பணி பரிசீலனையில் உள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு கூறினார். 
பேட்டி 
கும்பகோணத்தில் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகு சார்பில் சாலைகள் பராமரிக்கப்பட்டு வருவதை அமைச்சர் எ.வ.வேலு, கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் கூறியதாவது:-
தஞ்சை மாவட்டத்தில் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகு  சார்பில் தஞ்சை கோட்டத்தில் மாநில சாலைகள் 488 கி.மீ, மாவட்ட முக்கிய சாலைகள் 51 கி.மீ, மாவட்ட இதர சாலைகள் 1775 கி.மீ. ஆக மொத்தம் 2,314 கி.மீ. நீளமுள்ள சாலைகள் பராமரிக்கப்படுகிறது.
மூன்று வழித்தடமாக 
இதில் தஞ்சை மாநகராட்சி பகுதியில் மட்டும் 79 கி.மீ. நீள நெடுஞ்சாலைகளில் அகலப்படுத்துதல், மேம்பாடு செய்தல், வடிகால் கட்டுதல், தடுப்புச்சுவர் கட்டுதல் பணிகள் மற்றும் கல்லணை கால்வாய் மற்றும் வடவாறு ஆகிய ஆறுகளின் குறுக்கே ரூ.7 கோடி மதிப்பில் நான்கு வழி போக்குவரத்து கொண்ட பாலங்கள் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதில் கும்பகோணம் நகர் புறவழிச்சாலையை இருவழி தடத்தில் இருந்து மூன்றுவழித் தடமாக அகலப்படுத்தி மேம்பாடு செய்தல் பணியானது ரூ.19.72 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருவையாறில், ரூ.191 கோடியில் புறவழிச்சாலை
பட்டுக்கோட்டை நகருக்கு 14.40 கி.மீ. நீளத்திற்கு புறவழிச்சாலை அமைக்கும் பணிக்காக ரூ.2.61 கோடி மதிப்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. 
கும்பகோணம் மாநகருக்கு 9.42 கி.மீ நீளத்திற்கு ரூ.28 கோடி மதிப்பிலும், திருக்காட்டுப்பள்ளி நகருக்கு 3.20 கி.மீ நீளத்திற்கு ரூ.4.15 கோடி மதிப்பிலும் புறவழிச்சாலை அமைக்க நில எடுப்பு பணிகள் நடந்து வருகிறது.
திருவையாறு நகருக்கு 6.75 கி.மீ நீளத்திற்கு ரூ.191 கோடி மதிப்பில் புறவழிச்சாலை அமைக்க ஒப்பந்தப்புள்ளி பரிசீலனையில் உள்ளது. 
தேசிய நெடுஞ்சாலை அலகின் மூலம் திருவையாறு புறவழிச்சாலை முதல் தஞ்சை மாநகராட்சி பிருந்தாவனம் சாலை வரை ஒரு பசுமை வழி புறவழிச்சாலை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். 
மரக்கன்று நடும் திட்டம் 
முன்னதாக அமைச்சர் எ.வ.வேலு, கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை மலையப்ப நல்லூரில் மரக்கன்று நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா, மாநில பெற்றோர் ஆசிரியர் கழக துணைத்தலைவர் எஸ்.கல்யாணசுந்தரம், மாநகராட்சி துணை மேயர் தமிழழகன், கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் லதா மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்