வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெயர் பதிவு செய்து காத்திருப்பவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெயர் பதிவு செய்து காத்திருப்பவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

Update: 2022-05-15 19:30 GMT
சிவகங்கை, 
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் உயிர்ப்பதிவேட்டில் காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. முறையாக பள்ளியில் படித்து 9-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று 10-ம் வகுப்பில் தோல்வி அடைந்தவர்கள் மாதம் ரூ.200-ம், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300-ம், பிளஸ்- 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400-ம், பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.600 வீதம் 3 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்தொகை நேரடியாக மனுதாரர்களது வங்கிக்கணக்கில் காலாண்டுக்கு ஒருமுறை வரவு வைக்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் இளைஞர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தங்களின் கல்வித்தகுதிகளை பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவு செய்திருக்க வேண்டும். தொடர்ந்து, பதிவினை புதுப்பித்து இருக்க வேண்டும். ஆதிதிராவிடர்மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும், ஏனையோர் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000  மிகாமல் இருக்க வேண்டும். அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்கு சென்று படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட மாட்டாது. எனினும், தொலைதூரக் கல்வி அல்லது அஞ்சல் வழி மூலம் கல்வி கற்பவர்கள் உதவித்தொகை பெறலாம்.
சுயஉறுதி மொழி ஆவணம் சமர்ப்பிக்காத பயனாளிகளுக்கு உதவித்தொகை நிறுத்தப் படும். இந்த உதவித்தொகை பெறுவதற்கு மேற்காணும் தகுதிகள் உள்ளவர்கள் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு அனைத்துக் கல்விச்சான்றுகள் மற்றும் வேலை வாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வந்து இலவசமாக விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம்.இதுவரை உதவித்தொகை பெறாத தகுதியான இளைஞர்கள் விண்ணப்பத்தினை பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பத்தை அலுவலகத்தில் வேலை நாளில் நேரில் கொடுத்து பயனடையலாம். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்