சிவகங்கை அருகே பீஜப்பூர் சுல்தான் கால காசுகள் கண்டெடுப்பு
சிவகங்கை அரசனேரி கீழமேடு பகுதியில் பீஜப்பூர் சுல்தான் காசுகள் கண்டெடுக்கப்பட்டது.
சிவகங்கை,
சிவகங்கை அரசனேரி கீழமேடு பகுதியில் பீஜப்பூர் சுல்தான் காசுகள் கண்டெடுக்கப்பட்டது.
ஆய்வு
சிவகங்கை தொல்நடைக் குழுவை சேர்ந்த க.சரவணன் வித்தியாசமான 3 உலோகச் சில்லுகள் கிடைத்ததாக சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனர் காளிராசாவிடம் ஒப்படைத்தார். அவைகளை ஆய்வு செய்தபோது அவை பீஜப்பூர் சுல்தான் காலத்துக்காசுகள் என்று தெரிந்தது.
இதுகுறித்து சிவகங்கை தொல் நடைக்குழு நிறுவனர் காளிராசா கூறியதாவது:-
சிவகங்கையை அடுத்த அரசனேரி கீழே மேடு பேச்சிக்குளம் முனிக் கோவிலில் 3 உலோகச் சில்லுகள் கிடைத்ததாக என்னிடம் ஒப்படைத்தார். இது செம்பால் செய்யப்பட்டதாக இருந்தாலும் நேர்த்தியான வட்ட வடிவில் இல்லாமல் முன்னும் பின்னுமாக இருந்தது. இதில் உள்ள வேறுபட்ட எழுத்து வடிவத்தை கொண்டு காசு என்பதை உறுதி செய்ய முடிந்தது.
தனிஅரசு
இந்த காசுகள் குறித்த முழுமையான தகவலை தஞ்சை நாணயவியல் அறிஞர் ஆறுமுகம் சீதாராமன் அவர்களின் உதவியோடு ஆய்வு செய்ததில் இவை பீஜப்பூர் சுல்தான்கள் கால காசுகள் என்பதை உறுதி செய்ய முடிந்தது. கர்நாடக மாநிலத்தில் உள்ள பீஜப்பூரை தலைநகராகக் கொண்டு வடக்கு கர்நாடகா பகுதியையும் தெற்கு மகாராஷ்டிரப் பகுதியையும் 1490-ல் இருந்து 1686-ம் ஆண்டு வரை ஆண்டவர்கள் பீஜப்பூர் சுல்தான்கள், 1490-ல் பாமினி சுல்தான்களிடம் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு தனியரசாக இது செயல்பட்டது.
யூசுப் அடில் ஷா தொடங்கி 9 அரசர்கள் இந்த பகுதியை ஆட்சி செய்தனர். சங்க காலம் தொட்டே காசுகள் புழக்கத்தில் இருந்தாலும் தங்கம், வெள்ளியை அடுத்து பிற்காலத்தில் செம்பால் ஆன காசுகள் ஆட்சியாளர்களால் பெருவாரியாக வெளியிடப் பெற்றன. நமக்கு கிடைத்துள்ள காசுகள் செம்பால் ஆன தோடு அதிக எடை உள்ளதாக உள்ளன. 3 காசுகளில் 2 காசுகள் 8 கிராம் எடையும் ஒரு காசு 7 கிராம் எடையுமாக உள்ளன. ஒரு காசில் தேவநாகரி எழுத்தில் ராஜா என்று எழுதப்பட்டு உள்ளது. மற்ற எழுத்துக்கள் பாரசீக எழுத்துக்களில் எழுதப்பட்டு உள்ளன.
வணிக தொடர்பு
அலி அடில் ஷா 1558-1579 என்ற பெயர் குறிப்பிடப்பட்டு இருக்கலாம். இவரது காலம் 16-ம் நூற்றாண்டு. காசு கிடைக்கப் பெற்ற இந்த பகுதி விஜயநகர, நாயக்கர் ஆட்சி காலத்தில் பாளையங்களாக பிரிக்கப்பெற்ற பகுதியிலும் பின்னர் ராமநாதபுர சேதுபதிகளின் ஆட்சியின் கீழும் 1729-க்குப்பிறகு சிவகங்கை சீமைப் பகுதியிலும் இருந்திருக்கும் விஜய நகர, நாயக்கர், சேதுபதி, சசிவர்ணர் ஆகியோரது காசாக இல்லாது அதற்கு முந்தைய மதுரை சுல்தான்கள் காசாகவும் இல்லாது இந்தபகுதி ஆளுகைக்கு தொடர்பற்று இருப்பதால் இது வணிகத் தொடர்பிலோ அல்லது இறைவழிப் பயணத்தின் வழியோ இந்த காசு இப்பகுதிக்கு வந்திருக்கலாம்.
அரிது
மதுரை, தஞ்சாவூர், கரூர், திருநெல்வேலி போன்ற பகுதிகளில் ஆண்டாண்டு காலமாய் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆற்றில் காசுகள் இழுத்து வரப் பெறுவதும் அவற்றை அரித்து சலித்து எடுப்பதும் பல காலங்களாக தொழிலாகவே நடைபெற்று வந்துள்ளன. ஆனால் சிவகங்கை போன்ற பகுதிகளில் இவ்வாறான காசுகள் கிடைப்பது அரிதாகவே உள்ளது.
மேலும் சிவகங்கை தொல் நடைக் குழுவினர் கண்டறிந்த முதல் காசு இதில் என்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம் இவ்வாறு அவர் கூறினார்.