மது குடித்து விட்டு கேவலமாக பேசியதால் குத்திக்கொன்றேன் கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்
மது குடித்து விட்டு கேவலமாக பேசியதால் குத்திக்கொன்றேன் கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்
ராசிபுரம்:
மது குடித்து விட்டு கேவலமாக பேசியதால் ஆத்திரமடைந்து குத்தி கொன்றதாக கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
தொழிலாளி கொலை
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் டவுன் வெங்கடசாமி தெருவை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 25). கூலித்தொழிலாளி. கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஈஸ்வரன் அவரது வீட்டில் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். கொலையாளிகள் யார்? காரணம் என்ன? என்ற விவரம் அப்போது தெரியவில்லை. சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
மேலும் கொலையாளிகளை பிடிக்க ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் ஆகியோர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அதன்பேரில் தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.
மது குடிக்கும் பழக்கம்
இந்த நிலையில் ராசிபுரம் டவுன் வி.நகர்-18, கருப்பனார் கோவில் தெரு பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி ஜெயமணிகண்டன் (28) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர் ஈஸ்வரனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய கத்தி, அவர் அணிந்திருந்த ரத்தக்கறை படிந்த சட்டை மற்றும் பேண்ட் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். இதையடுத்து கைதான ஜெயமணிகண்டன் போலீசாரிடம் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலத்தில் கூறியதாவது:- கடந்த ஓராண்டு காலமாக நானும் கொலை செய்யப்பட்ட ஈஸ்வரனும் ஒன்றாக மது குடிப்பது வழக்கம். அப்போது நான் குடிக்கும் மதுவை ஈஸ்வரனுக்கு கொடுப்பேன். மேலும் மது குடிக்கும் போது வைத்திருக்கும் தின்பண்டத்தில் பாதியை அவர் வாங்கி கொள்வார்.
மனதை பாதித்தது
மேலும் அவர் மது குடித்ததும், என்னை அடிமை போல் நடத்துவார். மது வாங்கி வா, சிகரெட் வாங்கி வா என்று கேவலமாக பேசினார். இவ்வாறு ஓராண்டு காலமாக ஈஸ்வரன் என்னிடம் நடந்து கொண்ட விதம் எனது மனதை மிகவும் பாதித்தது. அதன்படி சம்பவத்தன்று நான் மது குடித்து கொண்டிருந்தேன்.
அப்போது அங்கு வந்த ஈஸ்வரன் என்னிடம் இருந்த மதுவை வாங்கி குடித்தார். அவருக்கு போதை அதிகமாகவே வழக்கம்போல் என்னை கேவலமாக பேசினார். இந்த நிலையில் தான் அவரை அவருடைய வீட்டில் வைத்து குத்தி கொலை செய்தேன் என்று கூறினார். இதையடுத்து ஜெயமணிகண்டனை மருத்துவ பரிசோதனைக்கு பின் ராசிபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக போலீசார் அழைத்து சென்றனர்.