ஆசிரியர்கள் கையில் பிரம்பை எடுக்காததால் போலீசார் பிரம்பை தூக்கும் நிலை ஏற்பட்டுள்ளது ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி கிருபாகரன் பேட்டி
ஆசிரியர்கள் கையில் பிரம்பை எடுக்காததால் போலீசார் பிரம்பை தூக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்று ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி கிருபாகரன் கூறினார்.
நாகர்கோவில்,
ஆசிரியர்கள் கையில் பிரம்பை எடுக்காததால் போலீசார் பிரம்பை தூக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்று ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி கிருபாகரன் கூறினார்.
நாகர்கோவிலுக்கு வந்திருந்த ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி கிருபாகரன் 'தினத்தந்தி' நிருபரிடம் கூறியதாவது:-
கணித ஆசிரியர்
குமரி மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர் முகமது ஹனீபா எங்கள் ஊரில் நான் படித்த பள்ளியில் எனக்கு பாடம் நடத்தினார். எளிதாக புரியும்படி கணக்குப்பாடத்தை சொல்லிக் கொடுத்தார். அந்த பாடத்தை விரும்பி படிக்கும் அளவுக்கு எங்களது மனநிலையை மாற்றியவர். அதனால் மாணவர்களாகிய எங்களுக்கு அவரை மிகவும் பிடிக்கும். அவரும் மாணவர்களிடம் அன்பாக பழகி, அனைவரையும் அவர்பால் ஈர்த்தவர். பின்னர் நான் பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் சட்டப்படிப்பை செய்யாறிலும், சென்னையிலும் மேற்கொண்டேன். ஆசிரியர் முகமது ஹனீபா 3 ஆண்டு காலம் அங்கு பணிபுரிந்துவிட்டு வேறு ஊருக்கு மாற்றலாகிச் சென்றுவிட்டார்.
47 ஆண்டுகளுக்கு பிறகு...
அதன்பிறகு அவரை தேடியும் நான் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆசிரியர் முகமது ஹனீபா செல்போன் எண் கிடைத்தது. உடனே அவரை தொடர்பு கொண்டு நான் நாகர்கோவிலுக்கு வருகிறேன், வரும்போது உங்கள் வீட்டுக்கு வந்து சந்திக்கிறேன் என்று கூறியிருந்தேன். ஆனால் அவர் என்னைத்தேடி நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்துவிட்டார். எங்கள் ஊரில் நான் படித்தபோது பார்த்த ஆசிரியரை 47 ஆண்டுகள் கழித்து இன்று பார்க்கிறேன். இந்த சந்திப்பு மனதுக்கு மிகுந்த சந்தோஷமாகவும், மனநிறைவாகவும் இருந்தது. தமிழ் ஆசிரியர் குறித்து விசாரித்தேன், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
எங்கள் காலத்தில் ஆசிரியர்கள் மீது நல்ல மதிப்பும், மரியாதையும் இருந்தது. நான் பள்ளியில் படிக்கும்போது எங்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியர்கள் சொல்லிக்கொடுத்த விதம்தான் என்னைப்போன்றோரை இந்த அளவுக்கு உயர்த்தியுள்ளது. அதனால் அவர்கள் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்.
ஒத்துழைக்க வேண்டும்
ஆசிரியர்கள் சாப்பிட்டு முடித்தபிறகு அவர்கள் சாப்பிட்ட பாத்திரங்களை மாணவர்களாகிய நாங்கள் கழுவி வைப்போம். அது தவறு என்று நாங்களும் நினைத்தது இல்லை. எங்களது பெற்றோரும் நினைத்தது இல்லை. வகுப்பறைகளை மாணவர்கள் சுத்தம் செய்வது பெரிய குற்றம் இல்லை. இதுமாதிரியான செயல்கள் தன்சுத்த செயல்பாட்டை உருவாக்குவதோடு, சேவை செய்யும் மனப்பான்மையை உண்டாக்கும்.
நல்ல ஆசிரியர்களை மாணவர்கள் மதிக்க வேண்டும். மதித்தால்தான் உயர்வு பெறமுடியும். ஆசிரியர்கள் மட்டுமல்ல பெரியவர்கள் அனைவருக்கும் மரியாதை கொடுக்க வேண்டும். பள்ளியில் ஆசிரியர்களை கேலி, கிண்டல் செய்வது, மாணவர்கள் மதுகுடித்துவிட்டு வகுப்பறையில் ஆட்டம் போடுவது என்பதெல்லாம் தவறாகும். ஆசிரியர்கள்- மாணவர்கள் உறவு என்பது புனிதமானதாகும். ஆசிரியர்களை மதித்தால்தான் நாம் உயர்வு பெற முடியும். ஆசிரியர்களை மதிக்காத மாணவர்களிடம் என்னதான் சிறப்பு, புத்திசாலித்தனம் இருந்தாலும் அவர்கள் வாழ்வில் கண்டிப்பாக உயர்வடைய முடியாது.
உரிமை கொடுக்க வேண்டும்
பள்ளியில் மாணவர்களை ஆசிரியர்கள் கண்டிப்பது நல்லதுக்காகத்தான் என்பதை பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். நல்ல ஆசிரியர்கள், மாணவர்களை திருத்துவதற்கான உரிமைகளை பெற்றோர்கள் கொடுக்க வேண்டும். அப்போது இந்த மாணவர்கள் எதிர்காலத்தில் தங்களது குழந்தைகளை ஒழுங்காக வழிநடத்துவார்கள்.
குழந்தைகளை கண்டிக்கும் ஆசிரியர்களை திட்டுவதை, அவர்கள் மீது புகார் கொடுப்பதை பெற்றோர்கள் குறைக்க வேண்டும். ஆசிரியர்கள் கையில் பிரம்பை தூக்கக்கூடாது என்று எப்போது சொல்ல ஆரம்பித்தார்களோ? அதில் இருந்து போலீசார் கையில் பிரம்பைத் தூக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு நீதிபதி கிருபாகரன் கூறினார்.
-----