தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தேங்கி நிற்கும் கழிவுநீர்
கரூர் மாவட்டம், பாலத்துறை அருகே புகழூர் வாய்க்கால் செல்கிறது. இதில் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே பாலம் கட்டப்பட்டு அந்த வழியாக தண்ணீர் செல்கிறது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து சாக்கடை கழிவு நீர் வாய்க்காலில் கலந்து பாலத்தின் அருகே தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. இதில் பல்வேறு வகையான பிளாஸ்டிக் கழிவுகள், ஆகாயத்தாமரைகள் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி மர்ம காய்ச்சல் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், புகழூர், கரூர்.
ஆபத்தான கழிவுநீர் தொட்டி
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள பெரியாளூர் மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் பயன்படுத்தும் வகையில் தனித்தனி கழிவறைகள் உள்ளது. இந்த கழிவறைகளில் வெளியேற்றப்படும் கழிவுநீர் தேங்க அருகில் அமைக்கப்பட்டுள்ள ஆழமான குழிக்கு பாதுகாப்பாக மூடாமல் சாதாரன ஆஸ்பெட்டாஸ் சீட் போட்டு மூடப்பட்டுள்ளதால் துர்நாற்றம் வீசுவதோடு மாணவர்கள் அந்தப்பக்கமாக சென்று அந்த சீட்டில் ஏறினால் உடைந்து ஆபத்துகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. ஆகவே கோடை விடுமுறை காலத்தில் கழிவுநீர் தொட்டிக்கு பாதுகாப்பான மூடி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், பெரியாளூர் மேற்கு, புதுக்கோட்டை.
தகனமேடை அமைக்கப்படுமா?
புதுக்கோட்டை மாவட்டம், முள்ளூர் ஊராட்சியில் உள்ள செருக்காகுளம் கரை, அண்ணாநகர், பொன்னி நகர், வைரவன் குடியிருப்பு, புதுராசாபட்டி, கரையப்பட்டி, தென்னதிரையன்பட்டி, வெள்ளைக்கோன்பட்டி ஆகிய பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ளவர்கள் உயிரிழந்தால் அவர்களின் உடல்களை தகனம் செய்ய இப்பகுதியில் தகன மேடை இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சுரேஷ், முள்ளூர், புதுக்கோட்டை.