மற்றவர்களின் தாய் மொழியையும் மதிக்க வேண்டும் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
மற்றவர்களின் தாய் மொழியையும் மதிக்க வேண்டும் என்று தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
பொன்னமராவதி:
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பகுதியில் நடைபெற்ற பல்வேறு சுபநிகழ்ச்சிகளில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார். முன்னதாக அவர் பொன்னமராவதி ஆவுடைநாயகி சமேத ராஜராஜ சோழீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது அப்பகுதி பொதுமக்கள் கோவில் புனரமைப்பு பணியை விரைவுபடுத்தி விரைவில் கும்பாபிஷேகம் நடத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பரிந்துரைக்குமாறு மனு கொடுத்தனர். தொடர்ந்து தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஜிப்மரில் எந்த இடத்திலேயும் இந்தி திணிக்கப்படவில்லை, அங்கு மட்டுமல்ல புதுச்சேரியிலும் இந்தி திணிக்கப்படாது. எப்போதுமே தாய் மொழி மீது அன்பும் பாசமும் இருக்க வேண்டும். அதேபோல் மற்றவரின் மொழி மீது எதிர்ப்பு இருக்கக்கூடாது. ஏனென்றால் அது இன்னொருவரின் தாய்மொழி, நமது தாய்மொழியை மதிப்பது போலவே மற்றவர்களின் தாய்மொழியையும் மதிக்க வேண்டும். அந்த மொழியை கற்கிறோமா, இல்லையா என்பது இரண்டாவது பட்சம். இது இல்லாமல் புதுச்சேரியில் சில கட்சிகள் இதை எதிர்ப்பு கோஷமாக வெளிப்படுத்தி பிரிவினையை ஏற்படுத்தும் அளவிற்கு நடந்து கொள்வது தவறு. இவ்வாறு அவர் கூறினார். அப்போது, புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதாராமு, அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உடனிருந்தனர்.