வேலூரில் இடி, மின்னலுடன் பலத்த மழை

வேலூரில் ஒருமணி நேரத்துக்கும் மேலாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2022-05-15 17:47 GMT
வேலூர்

வேலூரில் ஒருமணி நேரத்துக்கும் மேலாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

வெயில் சுட்டெரித்தது

வேலூர் மாவட்டத்தில் கோடைகாலமான ஏப்ரல், மே மாதங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. அக்னிவெயில் தொடங்கிய கடந்த 4-ந் தேதி முதல் வெயிலின் தாக்கம் மேலும் அதிகமாக காணப்பட்டது. தினமும் 100 டிகிரிக்கும் மேலாக வெயிலின் அளவு பதிவானது. அதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். வெயிலின் வெப்பத்தை தணிக்க கோடை மழை பெய்யாதா என்று எதிர்பார்த்து கொண்டிருந்தனர்.

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள அசானி புயல் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. அதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களாக வேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வெயிலின் தாக்கம் குறைவாக காணப்பட்டது. பகல்வேளையில் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. ஆனால்  காலை வெயில் சுட்டெரித்தது. அதிகபட்சமாக 99.9 டிகிரி வெயில் பதிவானது.

இடி, மின்னலுடன் பலத்த மழை

இந்த நிலையில் மாலையில் வானத்தில் மேகங்கள் திடீரென திரண்டன. தொடர்ந்து 5 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. சிறிதுநேரம் மிதமான மழை பெய்தது. அதன்பின்னர் விட்டு, விட்டு மழை பெய்து கொண்டிருந்தது. இரவு 7 மணியளவில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக இடைவிடாது மழை கொட்டி தீர்த்தது. அதனால் தாழ்வான பகுதிகள், சாலையோரங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

இருசக்கர வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடியும், பொதுமக்கள் பலர் குடைபிடித்தப்படி சென்றதை காணமுடிந்தது. பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றது. அதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகினர். கோடை வெப்பத்தை குளிர்விக்கும் வகையில் பெய்த மழையினால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் செய்திகள்