திருக்கோவிலூரில் பள்ளி அருகில் பிளஸ்-1 மாணவர் சரமாரி வெட்டிக் கொலை

திருக்கோவிலூரில் பள்ளி அருகில் பிளஸ்-1 மாணவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். விருந்து இருப்பதாக கூறி அழைத்துச் சென்று சக மாணவரே தீர்த்து கட்டியுள்ளார்.;

Update: 2022-05-15 17:22 GMT
திருக்கோவிலூர், 

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்த டி.கீரனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி. இவருடைய மகன் கோகுல்(வயது 17). இவர் சந்தைப்பேட்டையில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு கோகுல், தனது வீட்டில் இருந்தார். அப்போது அதே பள்ளியில் கோகுலுடன் படிக்கும், 17 வயதுடைய மாணவர் மோட்டார் சைக்கிளில் வந்து, வெளியே செல்லலாம் வா என்று கோகுலை அழைத்தார். அதற்கு கோகுலின் தாய் ஜெயபாரதி, இரவு நேரத்தில் வெளியில் செல்ல வேண்டாம் என்று கூறியுள்ளார். 

விருந்திற்காக அழைத்து... 

ஆனால் அவரோ, உனக்காக முக்கிய விருந்து காத்திருப்பதாகவும், உடனடியாக வருமாறும் கூறி கோகுலை தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். அதன்பிறகு கோகுல் வீடு திரும்பவில்லை. 
இதையடுத்து பெற்றோர், அவரது செல்போன் எண்ணை பலமுறை தொடர்பு கொண்டபோதும் அழைப்பை எடுக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் கோகுலை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். இருப்பினும் அவர் எங்கு சென்றார் என்ற விவரம் தெரியவில்லை. 

வெட்டுக்காயங்களுடன் பிணம்

இந்த நிலையில் நேற்று காலை திருக்கோவிலூர் புறவழிச்சாலையில் டி.கீரனூர் அருகே உள்ள தனியார் பள்ளியின் பின்புறம் கோகுல் வெட்டுக்காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதைபார்த்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். 

இதுபற்றி தகவல் அறிந்ததும் திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு, சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை செய்தது ஏன்?

இதையடுத்து கோகுலின் நண்பரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில், கோகுல் அடிக்கடி அந்த மாணவரை கேலியும், கிண்டலும் செய்து வந்துள்ளார். இதனை அந்த மாணவர் கண்டித்துள்ளார். இருப்பினும் கோகுல், தொடர்ந்து அந்த மாணவரை கிண்டல் செய்து வந்துள்ளார். இதனால் மன உளைச்சல் அடைந்த மாணவர், கோகுலை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார்.
அதன்படி, அவர் தனது மோட்டார் சைக்கிளில் அரிவாளை எடுத்துக்கொண்டு கோகுலின் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் அவரை விருந்து இருப்பதாக கூறி அழைத்துக்கொண்டு டி.கீரனூர் அருகே உள்ள தனியார் பள்ளியின் பின்புறம் சென்றுள்ளார். அங்கு இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது, அந்த மாணவர் தான் கொண்டு வந்திருந்த அரிவாளால், கோகுலை சரமாரியாக வெட்டியும், பேனா கத்தியால் குத்தியும் கொலை செய்து விட்டு ஓடிவிட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த மாணவரை போலீசார் கைது செய்தனர். 

சாலை மறியல்

இதற்கிடையே மாணவர் கோகுல் கொலை வழக்கில் சந்தேகம் இருப்பதாகவும், அவரை ஒருவர் மட்டுமே கொலை செய்ய முடியாது என்றும், ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் சேர்ந்து தான் கொலை செய்திருக்க வேண்டும் என்றும், இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கக்கோரியும் திருக்கோவிலூர்-சங்கராபுரம் சாலை சந்திப்பில் கோகுலின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

இதுபற்றி தகவல் அறிந்ததும் திருக்கோவிலூர் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாணவர் கொலை குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதையேற்ற அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அங்கு 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  பிளஸ்-1 மாணவரை சக மாணவரே வெட்டிக் கொலை செய்த சம்பவம் திருக்கோவிலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்