மாநில அரசின் நல்ல திட்டங்களுக்கு வேகத்தடை ஏற்படுத்தக் கூடியவராக கவர்னர் இருக்கக்கூடாது அமைச்சர் சேகர்பாபு பேச்சு
மாநில அரசின் நல்ல திட்டங்களுக்கு வேகத்தடை ஏற்படுத்தக் கூடியவராக கவர்னர் இருக்கக்கூடாது என காட்பாடியில் நடந்த தி.மு.க பொதுக் கூட்டத்தில் அமைச்சர் சேகர்பாபு பேசினார்.
காட்பாடி
மாநில அரசின் நல்ல திட்டங்களுக்கு வேகத்தடை ஏற்படுத்தக் கூடியவராக கவர்னர் இருக்கக்கூடாது என காட்பாடியில் நடந்த தி.மு.க பொதுக் கூட்டத்தில் அமைச்சர் சேகர்பாபு பேசினார்.
சாதனை விளக்க பொதுக்கூட்டம்
காட்பாடி தொகுதி தி.மு.க சார்பில் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் நடந்தது. கூட்டத்திற்கு காட்பாடி பகுதி செயலாளர் ஜி. வன்னியராஜா தலைமை தாங்கினார். காட்பாடி ஒன்றிய செயலாளர்கள் எஸ்.சரவணன், எஸ்.தணிகாசலம், எஸ். ராஜேந்திரன், சி.ரவி, வாலாஜா ஒன்றிய செயலாளர் ஏ.கே.முருகன், பகுதி செயலாளர்கள் என். பரமசிவம், பி. முருகப்பெருமாள், காட்பாடி ஒன்றியக்கழு தலைவர் வி.வேல்முருகன், மாநகர துணை செயலாளர் கோவிந்தன், மண்டலக் குழு தலைவர் வி.புஷ்பலதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகராட்சி துணைமேயர் எம்.சுனில் குமார் வரவேற்றார்.
அமைச்சர் துரைமுருகன்
பொதுக் கூட்டத்தில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:-
இந்த மழையுடன் கூட்டத்தை நடத்துவது சிரமம்தான். பொதுக்கூட்டத்தை மிக எழுச்சியாக நானே பாராட்டுகின்ற அளவில் நிர்வாகிகள் ஏற்பாடு செய்துள்ளனர். இதில் பேச முடியவில்லையே என்ற வருத்தம் எனக்கு உள்ளது. இயற்கை சில நேரங்களில் நமக்கு ஒத்துழைப்பதில்லை. இந்த முறை இல்லை, இது போல சில நேரங்களில் நடந்துள்ளது. அடுத்த முறை இதைவிட மிகப்பெரிய கூட்டத்தை கூட்டி நான் பேசுகிறேன்.
இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் பேசினார்.
கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது:-
வேகத்தடை ஏற்படுத்துபவராக...
இந்தி மொழியை நாங்கள் வெறுக்கவில்லை. ஆனால் தமிழகத்தில் இந்தி திணிப்பு நடைபெறும்போது உறுதியாக எதிர்ப்போம். சட்டசபையில் தீர்மானத்தை நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பினால் அவர் அதை மத்திய அரசுக்கு அனுப்ப தயங்குகிறார். அதனால்தான் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் அளித்த தேநீர் விருந்தை புறக்கணித்தார். நல்ல திட்டங்களுக்கு கவர்னர் வேகத்தடை ஏற்படுத்தக் கூடியவராக இருக்கக் கூடாது.
இந்த ஆட்சியில் பெண்களுக்கு முன்னுரிமை அளித்து திட்டங்கள் நிறைவேற்றப் படுகிறது. தமிழகத்தில் இல்லாமை என்பது இல்லை. மனித நேயம் காக்கும் அரசாக இந்த அரசு திகழ்கிறது. ஓராண்டை நிறைவு செய்த ஆட்சி நூறாண்டு தொடர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பொதுக்கூட்டத்தில் எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி., சட்டமன்ற கொறடா கோவி. செழியன், வேலூர் மத்திய மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ., டி.எம்.கதிர்ஆனந்த் எம்.பி. மாநகர செயலாளர் ப.கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மாவட்ட அவைத்தலைவர் தி.அ.முகமதுசகி, மாநகராட்சி மேயர் ஏ.சுஜாதா, மாவட்ட பொருளாளர் சி.நரசிம்மன், வள்ளலார் தொண்டு நிறுவனத் தலைவர் ஆர்.பி.ரமேஷ் உள்பட நிர்வாகிகள் பலர்கலந்து கெண்டனர்.
நேற்று மாலை முதலே காட்பாடியில் இடி மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது இருந்தாலும் மாலை 6.30 மணிக்கு பொதுக் கூட்டம் தொடங்கியது. கூட்டம் தொடங்கியது முதல் மழை விட்டு விட்டு பெய்து கொண்டிருந்தது. மழை பெய்தாலும் பொதுக்கூட்டம் தொடர்ந்து நடந்தது.