புனே பா.ஜனதா தலைவரை தாக்கி அலுவலகத்தை சூறையாடிய தேசியவாத காங்கிரசார்
சமூக வலைத்தளத்தில் சரத்பவாருக்கு எதிராக கருத்து பதிவிட்ட புனே பா.ஜனதா தலைவர் மீது தாக்குதல் நடத்தி, அலுவலகத்தை சூறையாடிய தேசியவாத காங்கிரசார் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புனே,
சமூக வலைத்தளத்தில் சரத்பவாருக்கு எதிராக கருத்து பதிவிட்ட புனே பா.ஜனதா தலைவர் மீது தாக்குதல் நடத்தி, அலுவலகத்தை சூறையாடிய தேசியவாத காங்கிரசார் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சரத்பவாருக்கு எதிராக கருத்து
பா.ஜனதா புனே மாவட்ட தலைவராக இருந்து வருபவர் விநாயக் அம்பேகர். இவர் வரி ஆலோசகராகவும் இருந்து வருகிறார். கடந்த 13-ந்தேதி சமூக வலைத்தளத்தில் சரத்பவாருக்கு எதிராக கருத்து ஒன்றை பதிவிட்டு இருந்தார். இதற்காக விநாயக் அம்பேகர் மன்னிப்பு கேட்கவேண்டும் என தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி. கிரிஷ் பாபட் தெரிவித்து இருந்தார்.
இந்தநிலையில் சம்பவத்தன்று விநாயக் அம்பேகருக்கு செல்போன் அழைப்பு ஒன்று வந்தது. அதில், எதிர்முனையில் பேசிய ஆசாமி வரி தொடர்பாக ஆலோசனை கேட்க வேண்டும் என தெரிவித்தார். இதனால் அலுவலகத்திற்கு வரும்படி விநாயக் அம்பேகர் அவரிடம் தெரிவித்தார்.
அலுவலகம் சூறை
சில மணி நேரத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 20 பேர் அவரது அலுவலகத்திற்குள் வந்தனர். பின்னர் அங்கிருந்த விநாயக் அம்பேகரை கன்னத்தில் அறைந்து, அலுவலகத்தில் இருந்த கண்ணாடியை உடைத்து சூறையாடி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இது பற்றி அவர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் சரத்பவாரை பற்றி அவதூறாக பதிவிட்ட விநாயக் அம்பேக்கர் மீது தேசியவாத காங்கிரஸ் கட்சி பிரமுகர் ஒருவர் விஷ்ரம்பாக் போலீசில் புகார் அளித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.