சங்கராபுரத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை
சங்கராபுரத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
சங்கராபுரம்,
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் கொடுமையாக இருந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வந்தனர். இந்த நிலையில் தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி சங்கராபுரம் பகுதியில் நேற்று மாலை 4 மணியளவில் வானில் கருமேகங்கள் திரண்டதுடன், குளிர்ந்த காற்றும் வீசத்தொடங்கியது. பின்னர் சிறிது நேரத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சுமார் 1 மணி நேரம் பெய்த பலத்த மழைக்கு பின்னர் தூறிக்கொண்டே இருந்தது.
பொதுமக்கள் மகிழ்ச்சி
இந்த மழையால், தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியதுடன் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் இந்த திடீா் மழையால், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மழையில் நனைந்தபடி சென்றதை காணமுடிந்தது. சங்கராபுரம் பகுதியில் பெய்த மழையால், வெப்பம் தணிந்து பூமி குளிர்ந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதேபோல், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலும் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.