புதுப்பெண் காதலனுடன் ஓட்டம்

வருகிற 25-ந்தேதி திருமணம் நடக்க இருந்த நிலையில் புதுப்பெண் காதலுடன் ஓடிச்சென்றார்

Update: 2022-05-15 16:57 GMT
கடலூர்

திருமண ஏற்பாடு

கடலூர் மாவடிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 19 வயது கல்லூரி மாணவி. இவருக்கும் பண்ருட்டி அருகே கீழ்மாம்பட்டு பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் திருமணம் செய்து வைக்க இருவீட்டு பெற்றோரும் முடிவு செய்தனர். 
இதையடுத்து இருவருக்கும் வருகிற 25-ந் தேதி திருமணம் நடத்த முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளில் இருவீட்டாரும் ஈடுபட்டிருந்தனர். நேற்று முன்தினம் இரவு புதுப்பெண் தனது குடும்பத்தினருடன் சாப்பிட்டுவிட்டு வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை எழுந்து பார்த்தபோது புதுப்பெண்ணை காணவில்லை.
 இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். இருப்பினும் புதுப்பெண் கிடைக்கவில்லை.

போலீசார் விசாரணை

 இதுகுறித்து அவர்கள், திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
 முதற்கட்ட விசாரணையில், புதுப்பெண்ணுக்கும் அவருடன் கல்லூரியில் படித்து வந்த வாலிபர் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதும், அந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கிடையே காதலாக மாறியதும், வீட்டில் திருமண ஏற்பாடுகளை செய்து வந்ததால் அந்தப் பெண் தனது காதலனுடன் ஓட்டம் பிடித்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்