குடிநீர், சாலை பணிகளை சிறப்பு கவனம் எடுத்து நிறைவேற்ற வேண்டும் அதிகாரிகளுக்கு கூடுதல் தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா அறிவுரை
குடிநீர், சாலை பணிகளை சிறப்பு கவனம் எடுத்து நிறைவேற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அரசின் கூடுதல் தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா அறிவுரை கூறினார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். நகராட்சிகள் நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய துறையின் அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா கலந்துகொண்டு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு செய்ததுடன் பணிகளின் முன்னேற்றம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
அப்போது அவர் கூறுகையில், பொதுமக்களின் முக்கிய தேவைகளான குடிநீர் வழங்குதல், சாலை அமைத்தல், பொது சுகாதார வளாகம் அமைத்தல், பாதாள சாக்கடை திட்டப்பணிகள் போன்றவற்றிற்கு சிறப்பு கவனம் எடுத்து செயல்பட வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் திட்டமிட்ட பணிகளை நிதி ஒதுக்கீடுக்கு ஏற்ப உடனடியாக முடிக்கும்போது வரும் ஆண்டுகளுக்கு தேவையான திட்டங்களை தேர்வு செய்ய எளிதாக இருப்பதுடன் போதிய நிதி ஒதுக்கீடு பெற்று பணிகளை முடித்து பொதுமக்களின் தேவைகளை எளிதாக நிறைவேற்ற முடியும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
வளர்ச்சி பணிகள்
முன்னதாக விழுப்புரம் எல்லீஸ்சத்திரம் சாலையிலுள்ள நகராட்சி இடத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் இயற்கை உரம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும், அதே பகுதியில் நகர்ப்புற அடர் வன வளர்ப்பு திட்டத்தின் கீழ் மரக்கன்று நடும் பணியையும்,
விழுப்புரம் பாண்டியன் நகரில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு கழிவுநீர் உந்து நிலையம் செயல்படுத்தப்பட்டு வரும் பணியையும், கீழ்பெரும்பாக்கம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் நூலகம் மற்றும் அறிவுசார் மைய கட்டிட பணிகளையும்,
மகாராஜபுரத்தில் கட்டப்பட்டு வரும் நவீன எரிவாயு தகன மேடை பணிகளையும் நகராட்சிகள் நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துறையின் அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஷிவ்தாஸ்மீனா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதோடு அப்பணிகளை விரைந்து முடிக்கும்படி அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் மோகன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், திண்டிவனம் சப்-கலெக்டர் அமித், குடிநீர் வடிகால் வாரிய முதன்மை பொறியாளர் ரவீந்திரன், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் குபேந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கர், விழுப்புரம் நகரமன்ற தலைவர் சக்கரை தமிழ்செல்வி, குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் அன்பழகன், நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா ஆகியோர் உடனிருந்தனர்.