கடலூரில் பாலத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி
கடலூரில் பாலத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி
கடலூர்
கடலூர் வண்டிப்பாளையம் சாலை அம்பேத்கர் நகர் பகுதியில் வசித்து வந்தவர் நாகராஜ் மகன் ராஜேந்திரன் (வயது 42). தொழிலாளியான இவருக்கு குடிப்பழக்கம் உண்டு. சம்பவத்தன்று ராஜேந்திரன் தனது மனைவி பிரபாவதியிடம் வெளியே சென்று வருவதாக கூறிச்சென்றவர், அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பிரபாவதி, இவரது மகன் வெங்கடேசன் ஆகியோர் பல்வேறு இடங்களில் தேடினர்.
இந்நிலையில் நேற்று காலை வண்டிப்பாளையம் சாலையில் உள்ள பெரிய வாய்க்கால் பாலத்தின் கீழ் உள்ள ஓடையில் ராஜேந்திரன் இறந்து கிடந்தார். இதை பார்த்த அவர்கள், கதறி அழுதனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த திருப்பாதிரிப்புலியூர் போலீசார் இறந்து கிடந்த ராஜேந்திரனின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் பாலத்தின் மீது படுத்திருந்த ராஜேந்திரன், தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது. தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.