மண்வளத்தை மேம்படுத்தும்பசுந்தாள் உரப்பயிர்களை பயிரிடுங்கள்
மண்வளத்தை மேம்படுத்தும்பசுந்தாள் உரப்பயிர்களை பயிரிடுங்கள்
போடிப்பட்டி:
மண்வளத்தை மேம்படுத்தும் பசுந்தாள் உரப்பயிர்களை நிலங்களில் பயிரிட்டு பலனடைய வேண்டும் என்று அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இயற்கை உரங்கள்
மண்வள மேம்பாட்டில் அங்ககப் பொருட்களின் அளவும் தழைச்சத்தின் அளவும் இரண்டு கண்களைப் போன்றவையாகும்.முந்தைய காலங்களில் நமது வேளாண்மை என்பது இயற்கை உரங்களைச் சார்ந்ததாகவே இருந்தது.ஆனால் சமீப காலங்களாக ரசாயன உரங்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால் மண்ணில் அங்ககப் பொருட்களின் அளவும், தழைச்சத்தின் அளவும் மிகவும் குறைந்துள்ளது.எனவே இந்த சத்துக்களை மேம்படுத்தும் விதமாக பசுந்தாள் உரங்களை இடுவது அவசியமாகிறது.
இதுகுறித்து திருப்பூர் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் மாரிமுத்து கூறியதாவது:-
பயிர் சாகுபடியில் நிலவி வரும் நுண்ணூட்டச்சத்து குறைபாட்டுக்கு, காலங்காலமாக நாம் மண்ணுக்குக் கொடுத்து வந்த இயற்கை உரங்களை மறந்ததே காரணம் என்பதை அனைவரும் உணர வேண்டும்.மண்ணில் இயற்கை உரங்களை எந்த அளவில் இட்டாலும் நன்மை மட்டுமே தரும்.இயற்கை உரங்களில் உள்ள பிசின் மண் துகள்களை அங்ககப் பொருட்களுடன் சேர்த்து கெட்டிப்படுத்துகிறது. இதனால் மண் அரிப்பு தடுக்கப்பட்டு மண்ணிலேயே தங்கி பயிருக்குத் தேவையான சத்துக்களை சிறிது சிறிதாக காலங்காலமாக வழங்குகிறது.
விழிப்புணர்வு
இயற்கை உரங்களில் முக்கியமானதும், மண் வள மேம்பாட்டுக்கு அவசியமானதுமான அங்கக மற்றும் தழைச்சத்தினைப் பெறுவதற்கு பசுந்தாள் உரம் இடுதல் அவசியமாகும்.அந்தவகையில் சீமை அகத்தி, சணப்பை, தக்கைப் பூண்டு, நரிப்பயறு, கொளிஞ்சி, அவுரி உள்ளிட்ட பசுந்தாள் உரப் பயிர்களை பயிரிட்டு, குறிப்பிட்ட கால அளவில் மடக்கி உழுவதன் மூலம் மண்வளத்தை மேம்படுத்த முடியும்.
இதுபோல நரிப்பயறை தானியப்பயிராகவும், தீவனப் பயிராகவும், பசுந்தாள் உரப்பயிராகவும் பயன்படுத்தலாம்.பயிர் நன்கு வளர்ந்ததும் ஒருமுறை வெட்டி தீவனமாகப் பயன்படுத்தி விட்டு அதன்பிறகு கூட பசுந்தாள் உரமாக்கலாம்.இதுபோல மணிலா அகத்தி, தக்கைப்பூண்டு, அவுரி போன்றவற்றையும் பசுந்தாள் உரமாகப் பயன்படுத்தி மண்வளத்தை மேம்படுத்தலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.