பருப்பு விலை அடிப்படையில் தேங்காய் கொள்முதல்

பருப்பு விலை அடிப்படையில் தேங்காய் கொள்முதல்

Update: 2022-05-15 15:48 GMT
காங்கயம்:
பருப்பு விலை அடிப்படையில் தேங்காய் கொள்முதல்  செய்ய வேண்டும் என்று காங்கயம் தாலுகா தேங்காய் கொப்பரை உற்பத்தியாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
பொதுக்குழு கூட்டம்
காங்கயம் தாலுகா தேங்காய் கொப்பரை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் காங்கயத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்  நடைபெற்றது. கூட்டத்திற்கு காங்கயம் தாலுகா தேங்காய் கொப்பரை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் பி.கே.பி.சண்முகம் தலைமை தாங்கினார். காங்கயம் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் கவுரவ ஆலோசகரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான என்.எஸ்.என்.நடராஜ் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
விவசாயிகள் மற்றும் வியாபாரங்களின் நலன் கருதி, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இருந்ததை போல தேங்காய்களை சதவீதம் மற்றும் அன்றைய பருப்பு விலை நிலவர அடிப்படையில் கொள்முதல் செய்ய வேண்டும். கொள்முதல் செய்யப்பட்ட தேங்காயின் தரம் மற்றும் புதிய இடங்களில், புதிய நபர்களிடம் இருந்து கொள்முதல் செய்யும் போது 10 சதவீத பணத்தை பிடித்து வைத்து தேங்காய் தரத்தின் இறுதி முடிவு வந்த பிறகு கணக்கு முடிக்க வேண்டும். மழைக்காலங்களில் தேங்காய் ஈரமாக வரும் போது அதன் ஈரத்தன்மையை பொறுத்து 1 டன்னுக்கு30 கிலோ முதல் 100 கிலோ வரை எடையை கழித்து பணம் கொடுக்க வேண்டும்.
மட்டை தேங்காய்
தேங்காய் தொட்டி கொள்முதல் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை சரி செய்வதற்கான ஏற்பாடு செய்யப்படவுள்ளது. மட்டை தேங்காய் கொள்முதல் செய்யும் போது லாப காய் ஒரே சீராக 100-க்கு 5 காய் என்ற முறையில் கொள்முதல் செய்ய வேண்டும் உள்பட பல்வேறு  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தில் சங்கத்தின் செயலாளர் ஜி.எஸ்.கவுரிசங்கர், பொருளாளர் ஏ.டி.சி.பழனிச்சாமி, காங்கயம் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.எஸ்.என்.தனபால், செயலாளர் கங்கா எஸ்.சக்திவேல், பொருளாளர் பாலாஜி ஜி.ஆர்.ரவிச்சந்திரன் உட்பட சங்கத்தின் கவுரக ஆலோசகர்கள், செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு அனைவரின் முன்னிலையில் தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

மேலும் செய்திகள்