வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்தில் 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் படுகாயம்
சென்னையில் வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்தில் 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் படுகாயம் அடைந்தனர்.
சென்னை,
சென்னையை அடுத்த பல்லாவரம் பகுதியை சேர்ந்தவர் சித்ரா (வயது 46). இவர் கிண்டி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் தனது இருசக்கர வாகனத்தில் காந்தி மண்டபம் மேம்பாலத்தில் இருந்து மத்திய கைலாஷ் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த சரக்கு வாகனம் எதிர்பாராதவிதமாக இவர் மீது மோதியது.
இதனால் கட்டுப்பாட்டை இழந்த சித்ரா, நிலைதடுமாறி சாலையில் விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதேபோல் சென்னை அசோக் நகர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் கஜேந்திரன் (53). இவர், நேற்று முன்தினம் நள்ளிரவில் அசோக்நகர் பகுதியில் தனது மோட்டார் சைக்கிளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். 6-வது அவென்யூ சாலையில் சென்றபோது எதிரில் வந்த கார், இவர் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டதில் காலில் காயம் அடைந்த கஜேந்திரன், கே.கே.நகர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி கிண்டி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து, காரை ஓட்டி வந்த அசோக்நகர் பகுதியை சேர்ந்த வடிவேல் கண்ணன் (38) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.