பணத்தகராறில் கத்தியால் குத்தி திருநங்கை கொலை

பெங்களூருவில், பணத்தகராறில் கத்தியால் குத்தி திருநங்கை கொலை செய்யப்பட்டார். அவரை உல்லாசமாக இருக்க அழைத்து சென்ற ஓட்டல் ஊழியர் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டது தெரியவந்து உள்ளது.

Update: 2022-05-15 15:13 GMT
பெங்களூரு:

திருநங்கைகளுடன் உல்லாசம்

  கலபுரகி மாவட்டம் சேடத்தை சேர்ந்தவர்கள் அர்ச்சனா(வயது 28), சஞ்சனா(26). திருநங்கைகளான இவர்கள் 2 பேரும் பெங்களூருவில் விபசார தொழில் செய்து வந்தனர். இந்த நிலையில் கொல்கத்தாவை சேர்ந்த அங்கித்குமார் என்பவர், பெங்களூருவில் ஓட்டலில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் சென்று கொண்டு இருந்த அங்கித்குமாரை உல்லாசமாக இருக்க அர்ச்சனாவும், சஞ்சனாவும் அழைத்து உள்ளனர்.

  இதன்பின்னர் அர்ச்சனா, சஞ்சனா, அங்கித்குமார் ஆகியோர் காட்டன்பேட்டையில் உள்ள ஒரு தங்கும் விடுதிக்கு சென்று உள்ளனர். அங்கு வைத்து அர்ச்சனா, சஞ்சனாவுடன் அங்கித்குமார் உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது. இதன்பின்னர் பணம் கொடுக்கும் விஷயத்தில் அர்ச்சனா, சஞ்சனா, அங்கித்குமார் இடையே பிரச்சினை ஏற்பட்டு உள்ளது.

குத்திக்கொலை

  இதனால் ஆத்திரம் அடைந்த அர்ச்சனாவும், சஞ்சனாவும் சேர்ந்து அங்கித்குமாரை தலையில் கத்தியால் தாக்கி உள்ளனர். இதனால் கோபம் அடைந்த அங்கித்குமார் கத்தியை பறித்து அர்ச்சனா, சஞ்சனாவை சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் அர்ச்சனாவும், சஞ்சனாவும் அலறினார்கள். அவர்களது அலறல் சத்தம் கேட்டு தங்கும் விடுதி ஊழியர்கள் வந்து பார்த்த போது அர்ச்சனா, சஞ்சனா, அங்கித்குமார் ஆகிய 3 பேரும் ரத்தவெள்ளத்தில் கிடந்தனர்.

  இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் 3 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் அர்ச்சனா பரிதாபமாக இறந்தார். சஞ்சனாவுக்கும், அங்கித்குமாருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து காட்டன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்