விபத்தில் காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண் தற்கொலை
துமகூரு அருகே விபத்தில் காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்து உள்ளது.;
துமகூரு:
விபத்தில் சாவு
துமகூரு தாலுகா ஹெப்பூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட முஸ்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் தனுஷ்(வயது 23). இதுபோல அரேஹள்ளி கிராமத்தில் வசித்து வந்தவர் சுஷ்மா(22). இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனுசுக்கும், சுஷ்மாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இதனால் அவர்கள் 2 பேரும் தீவிரமாக காதலித்து வந்தனர்.
தனுஷ் பெங்களூருவில் துணிக்கடை நடத்தி வந்தார். இந்த நிலையில் தனுஷ்,சுஷ்மாவின் காதல் விவகாரம் இருவீட்டாருக்கும் தெரியவந்தது. இருவீட்டாரும் காதலுக்கு பச்சைகொடி காட்டினர். இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி தனுஷ் விபத்தில் சிக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவர் உயிரிழந்தார். இதுபற்றி அறிந்ததும் சுஷ்மா மனம் உடைந்து காணப்பட்டார்.
விஷம் குடித்து தற்கொலை
மேலும் வீட்டில் யாரிடமும் பேசாமல் தனுசை நினைத்து அழுது கொண்டே இருந்து உள்ளார். அவரை குடும்பத்தினர் சமாதானப்
படுத்தி வந்து உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டில் வைத்து சுஷ்மா விஷத்தை குடித்து விட்டார். இதனால் வாயில் நுரைதள்ளிய நிலையில் உயிருக்கு போராடிய அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக துமகூரு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் சுஷ்மா இறந்து விட்டார். இதுகுறித்து ஹெப்பூர் போலீசார் நடத்திய விசாரணையில் காதலன் இறந்த துக்கத்தில் சுஷ்மா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து சுஷ்மாவின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் ஹெப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.