குலசேகரன்பட்டினத்தில் இரண்டு கருப்பட்டி தயாரிக்கும் தொழிற்கூடங்கள் தீயில் கருகி சாம்பல்

குலசேகரன்பட்டினத்தில் 2 கருப்பட்டி தயாரிக்கும் தொழிற்கூடங்கள் தீயில் கருகி சாம்பலானது. தொழில் போட்டியில் தீவைத்த மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

Update: 2022-05-15 14:50 GMT
குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினத்தில் 2 கருப்பட்டி தயாரிக்கும் தொழிற்கூடங்கள் தீயில் கருகி சாம்பலானது. தொழில் போட்டியில் தீவைத்த மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
கருப்பட்டி தயாரிப்பு
குலசேகரன்பட்டினம் காவடி பிறை தெருவைச் சேர்ந்த கோசலை பெருமாள் மகன் ராமசுப்பு (வயது 63). இவர் ஊருக்கு அருகில் சொந்தமாக கருப்பட்டி, பனங்கற்கண்டு தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு 5 மகன்களும்,  4  மகள்களும் உள்ளனர்.
ராமசுப்புவின் கடைசி மகன் கார்த்தி வீட்டின் அருகே பனங்கற்கண்டு தொழிற்கூடம் நடத்தி வருகிறார். ராமசுப்பு குலசேகரம்பட்டினம் கடற்கரை செல்லும் ரோட்டில் உள்ள தோட்டத்தில் பனங்கற்கண்டு, கருப்பட்டி பொருள் தயாரிக்கும் தொழிற்கூடம் நடத்தி வருகிறார்.
தொழிற்கூடம் சாம்பலானது 
சம்பவத்தன்று கார்த்தியின் கருப்பட்டி தயாரிக்கும் கூடத்தில் திடீரென்று தீ பிடித்து எரிந்துள்ளது. அக்கம் பக்கத்தினர் திரண்டு சென்று தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் தொழிற்கூடம் முற்றிலுமாக எரிந்து சாம்பலானது. சிறிதுநேரத்தில் ராமசுப்பு தோட்டத்தில் உள்ள கருப்பட்டி தொழிற்கூடத்தில் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதுகுறித்த தகவலின் பேரில் திருச்செந்தூர் தீயணைத்து துறையினர் ராமசுப்பு தோட்டத்திலுள்ள தொழிற்கூடத்தில் எரிந்த தீயை மேலும் பரவாமல் தடுத்தனர். ஆனால் அதற்குள் அந்த அங்கிருந்த பனங்கற்கண்டு, கருப்பட்டி மற்றும் தளவாடபொருட்கள் முற்றிலும் எரிந்து சாம்பலானது. மேலும் தோட்டத்தில் இருந்த பசுங்கன்று, கோழிகள், நாய்க்குட்டி அனைத்தும் தீயில் கருகி சாம்பல் ஆகிவிட்டன.  
தொழில் போட்டியில்...
தொழில் போட்டியில் மர்மநபர்கள் 2 இடங்களிலும்  தீ வைத்ததாக கூறப்படுகிறது. இந்த 2 இடங்களிலும் தீ விபத்தில் சுமார் ரூ.8 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சாம்பலானதாக ராமசுப்பு போலீசாரிடம் புகார் செய்துள்ளது.  இது குறித்து குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுராஜன், சப்-இன்ஸ்பெக்டர் முனியாண்டி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தீவைத்த மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்