போலி ஆவணங்கள் மூலம் வங்கியில் கடன் வாங்கி ரூ.1.28 கோடி மோசடி-பெண் உள்பட 4 பேர் கைது

போலி ஆவணங்கள் மூலம் வங்கியில் ரூ.1 கோடியே 28 லட்சம் கடன் வாங்கி மோசடி செய்த பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-05-15 14:47 GMT
கோப்பு படம்
மும்பை, 
போலி ஆவணங்கள் மூலம் வங்கியில் ரூ.1 கோடியே 28 லட்சம் கடன் வாங்கி மோசடி செய்த பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
வங்கி கடன்
மும்பை கல்பாதேவி பகுதியில் அரசுடமையாக்கப்பட்ட வங்கியில் மேலாளராக இருந்து வருபவர் பிரிஜேஷ் ஜெயின். இந்த வங்கியில் கடந்த 2012-ம் ஆண்டு சுதர்சன் ஜிர்ஜே என்பவர் ஆட்டோ ஏஜென்சி நடத்தி வரும் கைலாஷ் குப்தா என்பவரின் உதவியின் பேரில் 17 கார்கள் வாங்க வங்கி கடன் கேட்டு விண்ணப்பித்து இருந்தார். இதன்பேரில் கடந்த 2011, 2012-ம் ஆண்டு இடையே சுதர்சன் ஜிர்ஜே ரூ.1 கோடியே 26 லட்சம் கடன் பெற்றிருந்தார். இதற்கான தவணை செலுத்தாமல் இருந்ததால் வங்கி மேலாளர் பிரிஜேஷ் ஜெயின் ஆவணங்களை சரிபார்த்தார். 
அப்போது, இந்த ஆவணங்கள் அனைத்தும் போலியானது என தெரியவந்தது.
பெண் உள்பட 4 பேர் கைது
இது தொடர்பாக அவர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் விசாரணை நடத்தியதில், கோடிக்கணக்கில் மோசடி நடந்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து முதற்கட்டமாக ஆட்டோ ஏஜென்சி நடத்தி வந்த கல்பேஷ் குப்தாவை கைது செய்து விசாரித்தனர். 
இவர் கொடுத்த தகவலின்படி மோசடி கும்பலை சேர்ந்த சுதர்சன் ஜிர்ஜே மற்றும் ராகேஷ் பாட்டீல், ஹமீதா மோனுதீனு(வயது39) என்ற பெண்ணுக்கு தொடர்ப்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி, நேற்று மோசடி கும்பலை சேர்ந்த பெண் உள்பட 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்