ரேஷன் கடை விற்பனையாளரை தாக்கி கொலை மிரட்டல்

ரேஷன் கடை விற்பனையாளரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 3 பேர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-05-15 13:33 GMT
ஜோலார்பேட்டை

நாட்டறம்பள்ளியை அடுத்த அதிபெரமனூர் பகுதியை சேர்ந்தவர் சென்னப்பன். இவரது மகன் அம்பி (வயது 22). இவர் அதிபெரமனூர் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் பணிபுரியும்  ரேஷன் கடைக்கு கடந்த 10-ந் தேதி இரவு அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் லாரியில் கொண்டு வந்து இறக்கி விட்டு, அருகே உள்ள ஏலரப்பட்டி ரேஷன் கடைக்கு சென்று பொருள்களை இறக்கி விட்டு வந்தார். பினனர் விற்பனையாளர் அம்பி கடையில் அமர்ந்து அரிசி வந்தது குறித்து கணக்குகளை பார்த்து கொண்டு இருந்தார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த முனுசாமி மகன் ராமமூர்த்தி, வேலு மகன் ராஜேஸ், கங்காதரன் மகன் கிருஷ்ணகுமார் ஆகிய 3 பேரும் சேர்ந்து விற்பனையாளரிடம் ஏன் இரவு நேரத்தில் கடை திறந்து வைத்து வேலை செய்கிறாய் என கேட்டு தகராறு செய்து கைகளால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த விற்பனையாளர் அம்பி சிகிச்சைக்காக நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இது குறித்து அம்பி கொடுத்த புகாரின் பேரில், ராமமூர்த்தி உள்பட 3 பேர் மீது நாட்டறம்பள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்