கோத்தகிரி அருகே காட்டு யானை தாக்கி ஆதிவாசி பலி

கோத்தகிரி அருகே காட்டு யானை தாக்கியதில் ஆதிவாசி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2022-05-15 12:10 GMT
கோத்தகிரி

கோத்தகிரி அருகே காட்டு யானை தாக்கியதில் ஆதிவாசி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

காட்டு யானை தாக்கியது

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சோலூர்மட்டம் அருகே உள்ள கொப்பையூர் ஆதிவாசி இருளர் பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்த ராமன் என்பவரது மகன் பெருமாள் (வயது 54). கூலித் தொழிலாளி. இவரது மனைவி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவருக்கு மாரப்பன் (வயது 22) என்கிற மகன் உள்ளார். இந்தநிலையில் வழக்கம் போல் பெருமாள் கூலி வேலைக்கு சென்று விட்டு இரவு கடைசி பஸ்சில் வீடு திரும்பியுள்ளார். இரவு நேரத்தில் வனப்பகுதி வழியாக தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்தப்பகுதியில் உள்ள புதர் மறைவில் இருந்த காட்டு யானை ஒன்று அவரை தும்பிக்கையால் தாக்கியதோடு தூக்கிவீசியது. 

சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

இதனால் பலத்த காயமடைந்த பெருமாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நேற்று காலை அந்த வழியாக நடந்து சென்றவர்கள் பெருமாள் யானை தாக்கி இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்ததுடன், இது குறித்து சோலூர் மட்டம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். 
அதன் பேரில் வனத்துறையினர் மற்றும் கோத்தகிரி இன்ஸ்பெக்டர் வேல்முருகன், சப-் இன்ஸ்பெக்டர் முகமது ரபி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த பெருமாளின் உடலை ஆய்வு செய்த பின்னர், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அகழி அமைக்க வேண்டும்

இதுகுறித்து கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரை நடத்தி வருகிறார்கள். இது பற்றி அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், ஒவ்வொரு ஆண்டும் குஞ்சப்பனை சுற்றுவட்டார பகுதிகளில் பலாப்பழ சீசன் நிலவும் சமயங்களில் காட்டு யானைத் தாக்கி ஆதிவாசி மக்கள் உயிரிழப்பது வாடிக்கையாகி வருகிறது. எனவே யானைகள் கிராமப் பகுதிக்கு வராமல் தடுக்க அகழி வெட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 

மேலும் செய்திகள்