பாஞ்சாலங்குறிச்சியில் மாட்டுவண்டி பந்தயம்
பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாளை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
ஓட்டப்பிடாரம்:
பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாளை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. முதல்பரிசான ரூ.1.30 லட்சத்தை மேட்டூர் மாடுகள் தட்டிச்சென்றன.
மாட்டுவண்டி பந்தயம்
ஓட்டப்பிடாரம் அருகே பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழா மற்றும் வீரசக்கதேவி ஆலய விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடந்தது. பந்தயத்துக்கு வீரசக்கதேவி கோவில் குழுத்தலைவர் முருகபூபதி தலைமை தாங்கினார். மாட்டு வண்டி பந்தயம் பாஞ்சாலங்குறிச்சி ஓட்டப்பிடாரம் பசுவந்தனை சாலையில் நடந்தது. பெரிய மாட்டு வண்டி பந்தயம் மற்றும் சிறிய மாட்டு வண்டி பந்தயம் என இருபிரிவுகளாக நடந்தது.
மேட்டூர் மாடுகளுக்கு முதல்பரிசு
பெரிய மாட்டு வண்டி பந்தயம் 15 கிலோ மீட்டர் தூரத்துக்கு நடந்தது. பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் 8 வண்டிகள் கலந்து கொண்டன. போட்டிைய புளியம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மர் தொடங்கி வைத்தார். போட்டியில் மேட்டூர் அழகர்பெருமாள் வண்டி முதல் பரிசை தட்டிச் சென்றது. முதல் பரிசாக ஒரு லட்சத்து 31 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டன. இரண்டாம் பரிசு பெற்ற நெல்லை வேலாங்குளம் கண்ணன் வண்டிக்கு ஒரு லட்சம் ரூபாயும், மூன்றாவது பரிசு பெற்ற கச்சேரிதளவாய்புரம் தங்கராஜ் வண்டிக்கு ரூ.70 ஆயிரமும் வழங்கப்பட்டது.
சிறிய வண்டி
சிறிய மாட்டு வண்டி பந்தயம் 12 கிலோ மீட்டர் தூரத்துக்கு நடந்தது. பந்தயத்தில் 20 வண்டிகள் கலந்து கொண்டன. முதல் பரிசை புதூர்பாண்டியாபுரம் ராமசாமி வண்டி தட்டிச் சென்றது. முதல் பரிசாக ரூ.70 ஆயிரம் வழங்கப்பட்டன. இரண்டாவது பரிசு பெற்ற சண்முகபுரம் விஜயகுமார் வண்டிக்கு ரூ.50 ஆயிரமும், மூன்றாவது பரிசு பெற்ற சிங்கிலிபட்டி சித்தர் சங்குசாமி வண்டிக்கு ரூ.30 ஆயிரமும் வழங்கப்பட்டன. மாட்டு வண்டி பந்தயத்தை ஆயிரக்கணக்கான மக்கள் சாலையின் இருபுறமும் திரண்டு நின்று கண்டுகளித்தனர்.