விளாத்திகுளம் அருகே சூறாவளி காற்றுக்கு ஆயிரம் ஏக்கர் வாழை சேதம்
விளாத்திகுளம் அருகே வீசிய சூறாவளி காற்றுக்கு ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த வாழை தரையில் சாய்ந்து சேதமடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே வீசிய சூறாவளி காற்றுக்கு ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த வாழை தரையில் சாய்ந்து சேதமடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
வாழைகள் சேதம்
விளாத்திகுளம் அருகே உள்ள கோட்டைமேடு, புளியங்குளம், கோட்டநத்தம், துளசிப்பட்டி, அயன்வடமலாபுரம், மந்திக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்திருந்தனர். வாழைகள் அனைத்தும் அறுவடைக்கு தயாராக இருந்தன. இந்நிலையில் விளாத்திகுளம் பகுதியில் கடந்த 3 நாட்களாக மாலை நேரங்களில் பலத்த காற்று வீசியதால் அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் அடியோடு சரிந்து தரையில் விழுந்து, முற்றிலுமாக சேதமடைந்துள்ளன.
வாழ்வாதாரம் பாதிப்பு
காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் வாழை இழைகளும் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன. வாழை நடுவது முதல் பராமரிப்பு வரை ஒரு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை செலவு செய்து அறுவடைக்கு விவசாயிகள் காத்திருந்த நிலையில் பலத்த காற்றின் காரணமாக வாழைகள் அடியோடு சேதமடைந்துள்ளது. இதனால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
நிவாரணம் தேவை
தற்போது வாழைத்தார் ரூ.300 முதல் ரூ.500 வரை விற்பனையாகி வரும் நிலையில் பலத்த காற்றினால் வாழைகள் சேதம் அடைந்திருப்பது விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. பாதிக்கப்பட்ட வாழைகள் குறித்து அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், அதை போன்று பயிர் காப்பீட்டு தொகை கிடைக்க அரசு வழிவகை செய்யவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.