ஈரோட்டில் சாலையோரமாக கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள்

ஈரோட்டில் சாலையோரமாக மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு கிடந்தது.

Update: 2022-05-14 22:18 GMT
ஈரோடு
ஈரோட்டில் சாலையோரமாக மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு கிடந்தது.
மருத்துவ கழிவுகள்
ஈரோடு மாநகராட்சி முதலாவது மண்டலத்துக்கு உள்பட்ட பி.பி.அக்ரஹாரம் ஈ.து.கா. வீதியில் நேற்று மாலை மருத்துவ கழிவுகள் சாலையோரமாக கொட்டப்பட்டு கிடந்தது. இதைப்பார்த்த அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் அதிகாரிகள் அங்கு சென்று பார்வையிட்டனர். அப்போது பயன்படுத்தப்பட்ட ஊசிகளும், நோயாளிகளுக்கு டிரிப்ஸ் போடப்பட்ட டியூப்களும் கிடந்தன.
யாரோ மர்மநபர்கள் ஆட்கள் நடமாட்டம் இல்லாதபோது மருத்துவ கழிவுகளை கொண்டு வந்து கொட்டி சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மாநகராட்சி பணியாளர்கள் அந்த மருத்துவ கழிவுகளை அப்புறப்படுத்தினார்கள். இந்த மருத்துவ கழிவுகளை கொட்டியது யார் என்று மாநகராட்சி அதிகாரிகளும், கருங்கல்பாளையம் போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடும் நடவடிக்கை
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட பகுதி ஒதுக்குபுறமான பகுதியாக உள்ளது. இதற்கு முன்பு அங்கு மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டதில்லை. மேலும், அதன் சுற்றுவட்டார பகுதியில் பெரிய ஆஸ்பத்திரிகளும் இல்லை. எனவே மற்ற பகுதியில் இருந்து கொண்டு வந்து கொட்டப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம். மருத்துவ கழிவுகளை கொட்டியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஈரோட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரியார் நகர் பகுதியிலும், சாஸ்திரிநகர் பகுதியிலும் காலாவதியான மருந்துகள் கொட்டப்பட்டு கிடந்தன. எனவே மருத்துவ கழிவுகளும், காலாவதியான மருந்துகளும் சாலையில் கொட்டப்படுவது தொடர் கதையாகி வருகிறது. இதன்மூலமாக நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே பொது இடங்களில் மருத்துவ கழிவுகள், காலாவதியான மருந்து பொருட்கள் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்