மந்திரி பதவி கிடைக்க வசதியாக விஜயேந்திராவுக்கு மேல்-சபை உறுப்பினர் பதவி?

மந்திரி பதவி வழங்குவதற்கு வசதியாக விஜயேந்திராவுக்கு மேல்-சபை உறுப்பினர் பதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நேற்று நடந்த பா.ஜனதா ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தலைவர்கள் விரிவாக ஆலோசனை நடத்தியது தெரியவந்துள்ளது.

Update: 2022-05-14 21:46 GMT
பெங்களூரு:

விஜயேந்திராவுக்கு பதவி

  கர்நாடகத்தில் மேல்-சபையில் காலியாக உள்ள 7 இடங்களுக்கும், கர்நாடகத்தில் இருந்து மாநிலங்களவையில் காலியாக இருக்கும் 2 உறுப்பினர் பதவிகளுக்கும் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பா.ஜனதா சார்பில் போட்டியிடும் உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பது குறித்து பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் நேற்று ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது.

  அப்போது பா.ஜனதா மாநில துணை தலைவராக உள்ள விஜயேந்திராவுக்கு மேல்-சபை உறுப்பினருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்குவது குறித்து ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் விாிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.

பழைய மைசூரு மாவட்டங்களில்...

  மந்திரிசபை மாற்றியமைப்பின் போது விஜயேந்திராவுக்கு மந்திரி பதவி வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அவருக்கு மந்திரி பதவி வழங்கினால், மேல்-சபை உறுப்பினராக இருக்க வேண்டும். அதற்காக மேல்-சபை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் பட்டியலில் விஜயேந்திராவின் பெயரை சேர்க்கவும் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பட்டியலை பா.ஜனதா தேர்தல் தேர்வு குழுவுக்கு அனுப்பி வைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

  பழைய மைசூரு மாவட்டங்களில் பா.ஜனதாவை பலப்படுத்த மேலிடம் திட்டமிட்டு விஜயேந்திராவுக்கு மேல்-சபை உறுப்பினர் பதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து பா.ஜனதா மேலிட தலைவர்கள் தான் இறுதி முடிவு எடுக்க உள்ளனர்.

மேலும் செய்திகள்